Pages

Monday, 10 October 2016

அகநானூறு Agananuru 329

தலைவி தோழியிடம் சொல்லிக்கொண்டு வருந்துகிறாள்.


பூப் போன்ற என் கண் அவரைப் பார்க்க விரும்பியும், என் நெற்றி அவர் நீவுதலை விரும்பியும் பசபசக்கின்றன. காம நோய் மிகுந்து நான் வருந்துகிறேன். இந்த நிலையில் என்னை விட்டுவிட்டு நீங்கி வாழ என் காதலர் துணிந்துவிட்டார். நான் என்ன செய்வேன்?

உப்பு விற்கச் செல்லும் வணிகர்கள் குவிந்த கூரைகளைக் கொண்ட சிற்றூரில் இளைப்பாறுவர். அவர்களின் வண்டி நுகங்களை நீண்ட கயிற்றால் கட்டி ஒழுகையாக உப்பு வண்டியை இழுத்துவந்த எருதுகள் காட்டில் மேய்ந்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளும். இங்குச் சூறாவளிக் காற்று புழுதியை வாரிச் சுழற்றும். அந்த வழியில் இவரும் சிறிதே ஓய்வு எடுத்துக்கொண்டு செல்வாரோ?

அது பனி படிந்த முகடுகளைக் கொண்ட பன்மலை அடுக்கம். அங்கே இருண்டு கிடக்கும் காடு. அங்குள்ள நீர் இல்லாத சுனையில் வரிப்புலி குட்டி போட்டிருக்கும். அந்தக் குட்டி அந்தச் சுனையில் தன் முதுகை ஒடித்து நீட்டி உடம்பில் பயிற்சி எடுத்துக்கொள்ளும். நீர் அருந்தவேண்டி யானை அந்தச் சுனையில் தன் துதிக்கையை நீட்டும். அப்போது அந்தக் கையை புலிக்குட்டி கடிக்கும்; உருமும். இப்படிப்பட்ட காட்டைக் கடந்து அவர் செல்கிறாரே. நான் என்ன செய்வேன்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்           5
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
ஏகுவர் கொல்லோ தாமே பாய் கொள்பு,
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை  10
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
உறையூர் முதுகூத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment