Pages

Saturday, 8 October 2016

அகநானூறு Agananuru 323

ஐய (மெல்லிய) அடி


’இம்’ என்று ஊரார் பெரிதும் அலர் தூற்றுகின்றனர். 
நமக்கு நன்மை செய்வோர் நம்மை ஏசுகின்றனர். 
இந்தச் சொற்களால் வாடும்படி (என்னை உனக்குத் துணையாக வைத்துவிட்டு), நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர் திரும்பி வருவது உண்மையாகிவிட்டது. 

இதனைக் காண வருக. 

நுட்பமான, சிவந்த வன்மையின்றி மென்மையதான, சிறிய உன் காலடி நிலத்தில் அழுத்தமாக ஊன்ற அஞ்சியவளாக, மெல்ல மெல்லத் தடவிப் பார்த்து அடி வைத்து, நடந்து வா. 

கற்பில் மேம்பபடவளே வா.

வெயில் நுழைய முடியாமல் பலா மரங்களைத் தடுத்துக்கொண்டு மூங்கில் மரங்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் படமெடுத்தாடும் பாம்பின் பை அழியும்படி இடிக்கும் மேகம், மழைக்கால் இறங்கி, பனிக்கட்டியோடு மழை பொழிவதைப் பார். 
உன் கூந்தலைப் போன்ற மேகம் மழை பொழிவதைப் பார்.

மழை பொழியும் கார்காலம் வந்ததும் வந்துவிடுவேன் என்று சொன்னாரல்லவா? அதனால் வந்துவிடுவார். வந்து பார். தோழி தலைவிக்கு இவ்வாறு தெம்பூட்டிப் பேசுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின்
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர்
வருவர் என்பது வாய்வதாக,
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத்        5
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி,
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி!
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின்   10
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇக்
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பறநாட்டுப் பெருங்கொற்றனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment