Pages

Saturday, 8 October 2016

அகநானூறு Agananuru 321

காலிலிருக்கும் சிலம்பைக் கழற்றி வைத்துவிட்டு என் மகள் ஓசை படாமல் தன் காதலனுடன் சென்றுவிட்டாளே, என்று எண்ணித் தாய் கலங்குகிறாள்.

1
  • பசியோடு இருக்கும் யானையின் துன்பம் (பழங்கண்) போல, வாடிக் கிடக்கும் நீரில்லாத சுனையில் நுழைந்து கோடைக்காற்று வீசும்போது பறை முழங்குவது போல மலை வெடிப்புப் பள்ளத்தில் எதிரொலிக்கும்.
  • கதிர் போன்று மெல்லிய கால்களை உடைய பெண்மான் உண்ணவேண்டும் என்று எண்ணி, குதிர் போன்று பருத்த கால்களை உடைய ஆண்மான் வெண்ணிற இரும்பைப் பூக்களை மேயாமல் விட்டுக்கொடுக்கும்.
  • கழுத்தில் மணி கட்டிய பசுவினம் ஆணைத் தேடிக் குரல் கொடுக்கும். அவற்றை மேய்க்கும் கோவலர் அவை நீர் பருகுவதற்காக மண் விட்டுக்கொடுக்கும் நிலத்தை உடைத்து ஊறும் கலங்கல் நீரை அவற்றிற்கு ஊட்டுவர். பின்னர் அந்தக் கூவலில் உள்ள நீரை முதலில் யானைக்கன்று, அடுத்து பெண்யானை, கடைசியில் ஆண்யானை என்று முறை வைத்துக்கொண்டு தடவி உண்ணும்.

இப்படிப்பட்ட பொதுவிடத்தின் ஒரு ஒதுக்கிடத்தில் என் மகள் தன் துணைவனோடு இருப்பாளோ?
2
  • வில்லேர் உழவு செய்வதற்கு அஞ்சாத அந்தக் காளையோடு (காளை போன்ற காதலனோடு) இரவு வேளையில் அவனுக்கு முன்னால் நடந்து சென்றுகொண்டிருப்பாளோ?
  • தங்கி இருப்பாளோ, அல்லது நடந்துகொண்டிருப்பாளோ, என்ன செய்துகொண்டிருப்பாளோ?
என்றெல்லாம் எண்ணி நான் நொந்துகொண்டிருக்கிறேன்.

காலில் உள்ள சிலம்பு ஒலித்தால் தாய்க்குத் தெரிந்துவிடுமே என்று சிலம்பைக் கழற்றி வைத்துவிட்டு என் மகள் பாறைகளுடன் மூங்கில் உயர்ந்திருக்கும் மலை வழியில் சென்றுவிட்டாளே!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,                5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,                10
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
2
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,        15
யாய் அறிவுறுதல் அஞ்சி,
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது.
கயமனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கூவல்

No comments:

Post a Comment