Pages

Friday, 7 October 2016

அகநானூறு Agananuru 320

என் தலைவியைத் திருமணம் செய்துகொள்வேன் என்று 
கடலைக் கரியாக (சாட்சியாக) வைத்து 

சூள் உரைத்தாயே, 

அது பொய்யோ? 
என்று தோழி தலைவனை வினவுகிறாள்.
1
திரைப்பரப்பில் திமிலில் விரைந்து சென்று, பெரிய கண் கொண்ட வலிமை மிக்க மீன்களைச் சேர்ப்பு நில மக்கள் பிடித்துக்கொண்டு வருவர். அந்த மீன்களை அவர்களது தங்கையர் கானல் நிலத்துச் சிறுகுடியில் விழாக் கொண்டாடும் தெருவில் விலை கூறி விற்பர். அவர்கள் செல்வத் தங்கையர். இடையாடை மீது தழையாடையால் ஒப்பனை செய்துகொண்டிருக்கும் தங்கையர். இப்படிப்பட்டவர் வாழும் சேர்ப்பு நிலத் தலைவனே!
2
கண்டாரை உண்ணும் மலர் போன்ற கண்ணினை உடையவள் என் தோழி (தலைவி). அவளுக்குத் துன்பம். ஊரார் அலர் தூற்றும் துன்பம். அந்தத் துன்பம் நீங்க நீ அருள் செய்யவில்லை. பொய் சொல்லி ஏமாற்றுகிறாய்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

கழியில் நீந்திய குட்டைக்கால் அன்னம் கரையில் ஏறி அடுப்பங்கொடி படர்ந்திருக்கும் கானலில் சிறகினை உலர்த்தும். அப்போது புன்னை மரத்துப் பூந்தாதுகள் அதன்மீது உதிரும். அந்தத் துறையின் மணல் நடுங்கும்படித் தேரை ஓட்டிக்கொண்டு நீ வந்தாய். 

நாங்கள் செய்து விளையாடிய பாவை சிதையும்படித் தோரை ஓட்டிக்கொண்டு வந்தாய். 

என் தலைவியின் புத்தம்புது தோளை உண்டாய். 

அப்படி உண்ணும்போது சூள் உரைத்தாய். (சத்தியம் செய்தாய்) 
கடலைக் கரியாக (சாட்சியாக) வைத்துச் சூள் உரைத்தாய். 
திருமணம் செய்துகொள்வேன் என்று சூள் உரைத்தாய். 
அந்தச் சூளுரை பொய்யாயிற்றா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  நெய்தல்

1
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப!            5
2
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்,
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்,
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை     10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
வண்டற் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றை,
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?

பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment