Pages

Thursday, 6 October 2016

அகநானூறு Agananuru 317

எண்ணியதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்? 

அப்படி நடந்தது. 
தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
1
  • விரிந்த வானத்திலிருந்து பொழியும் மழையின் தொழில் நின்றுவிட்டது.
  • வானத்தில் பாய் விரித்தது போலப் பட்டப்பகலில் இருளைப் பரப்பிக்கொண்டு புகைநிறத்தில் தோன்றும் பனிக்காலமும் போய்விட்டது.
  • குவிந்த மொட்டுகளுடன் முருக்கம் பூக்கள், கூர்மையான பல்லைக் காட்டிச் சிரிக்கும் மகளிரின் நகங்கள் போல் மலர்ந்து முதிர்வதற்கு முன்பே இதழ்களைக் கொட்டுகின்றன.
  • வேங்கைப் பூக்கள் உதிர்ந்து சிதைந்து கிடப்பது போல, கன்னத்தில் பொன்னிறம் பூத்துக் கிடக்கிறது.
  • தேன் உண்ணும் வண்டினம் ஒலியுடன் ஊதும்போது குரவம் பூக்கள் தம் மகரந்தப் காம்புகளுடன் வெள்ளிக் குச்சிகள் போல உதிர்ந்து கிடக்கின்றன.
  • தும்பி இன வண்டுகள் ’இம்’ என்று துவைக்கும்போது (ஒலிக்கும்போது. துவைத்தல் = ஒலித்தல்: தொல்காப்பியம் உரியியல்) யாழில் எழும் விளரிப் பண் போலக் கேட்கிறது. 
  • பசுவினத்துக்குப் பாதுகாப்பு நல்கும் ஆசை மூட்டும் வேனில் காலம் இது.
  • வெயில் விரிந்தது போல் பூத்துக்கிடக்கும் மரா மரத்ததில் இருந்துகொண்டு குயில்கள் கூவும் ஓசை என் காதில் விழுகிறது.

இப்படிப்பட்ட பருவம் இங்குதான் இருக்கிறதா? இந்தப் பருவத்தில் வந்துவிடுவேன் என்று அவர் சொன்னாரே! அவர் சென்றிருக்கும் நாட்டில் இந்தப் பருவம் இல்லாமல் இருக்குமோ?

என்று மெல்ல மெல்ல நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்த நேரத்தில்.
2
ஆசைப்பட்டு நினைப்பதெல்லாம் நடப்பது போல என் காதலர் என்முன் வந்து நின்றார். என் தாய் தடவிக்கொடுத்த என் அழகு நெற்றியில் பாய்ந்திருந்த பசலை நோய் என்னைத் துறந்து எங்கே போய்விட்டது? (என்னுழியது)

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
'' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்   5
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து   10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்    15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்?'' என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
2
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,     20
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியது கொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?

தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
வடமோதங் கிழார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வெயில் அவிர் புரையும் வீ ததை மராம்
வெயில் போல் பூத்துக் கிடக்கும் மரா மரம்

No comments:

Post a Comment