ஊர் மேயும் ஊரனோடு பிணக்குப் போட்டுக்கொள்வதால் பயன் என்ன?
தோழி தலைவியைத் தேற்றி அறிவுரை கூறுகிறாள்.
1
மீன் விளையாடும் பொய்கை நீரில் ஆம்பல் பூக்களை மேய்ந்த முறுக்குக் கொம்பு எருமை பகலெல்லாம் சேற்றில் முதுகு படியத் தூங்கிக் கிடந்துவிட்டு, பொழுது போகும் வேளையில், கொழுத்த வரால் மீன் பிறழும்படி, பகன்றைக் கொடியை உடம்பில் சூடிக்கொண்டு, போர் வீரர் போல புறப்பட்டு வரும் ஊரின் தலைவன் உன் கணவனாகிய ஊரன்.
2
தேரில் ஏறிக்கொண்டு, அணிகலன்கள் பூட்டிய தோளை அசைத்துக் காட்டிக்கொண்டு, ஊர் கொள்ளாதபடி (ஊரார் மனம் தாங்கமுடியாதபடி) வந்த பரத்தை மகளிரைப் பார்த்து உன் கணவனால் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் அந்தப் பெண்களை மேய்கிறான். நீ இல்லத்தரசி. அவனிடம் பிணக்குப் போட்டுக்கொள்ள முடியுமா?
3
அப்படிப்பட்ட கணவன்மாரிடம் பிணக்குப் போட்டுக்கொண்டு வாழ்பவர்களின் நிலைமை என்னவாகும்? இல்லத்தில் திருமகள் இருக்கமாட்டாள். தான் சமைத்த உணவைத் தானே தனியே உண்ண வேண்டும். மழலை மொழி பேசும் மகன் பால் வற்றிய முலையைச் சுவைத்துக்கொண்டிருப்பான். இப்படித்தான் வாழவேண்டிய நிலைமை உண்டாகும். இது உனக்கு ஏன்? அவனோடு மாறுபடாமல் நடந்துகொள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
''துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, 5
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
2
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
பரத்தைமை தாங்கலோ இலென்'' என வறிது நீ 10
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
3
அது புலந்து உறைதல் வல்லியோரே,
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, 15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி
தலைமகளை நெருங்கிச் சொல்லியது.
ஓரம்போகியார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment