தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
உன்னை விட்டு அகன்று சென்றவர் எப்படியெல்லாம்
உன்னிடம் நடந்துகொண்டார் என்று எண்ணிப்பார். 
யானைப் பரிசில் பெறவேண்டும் என்று வள்ளலின்
கடைவாயிலில் காத்திருப்பவர் போல உன் வாயிலில் காத்திருந்தார். 
பேய் நடமாடும் நள்ளிரவில்,
ஓவியம் போல் கலை-வேலைப்பாடு கொண்ட உன் வீட்டுக் கதவை, வீட்டுக் காவலர் தூங்கும் நேரத்தில்
திறந்து உள்ளே வந்து உன்னைத் தழுவிக் கூடினார். 
“உன்னைக் காட்டிலும் சிறந்தவர் இந்த
உலகத்தில் இல்லை” என்று சொல்லி உன்னைப் பலநாள் பாராட்டி, உன் கூந்தலைத் தடவிக் கொடுத்துத்
தன் காதலை உன்மீது பொழிந்தார். 
இப்போது அந்தப் பயன் உனக்குக் கிடைக்காமல்
மாறியிருக்கிறது. 
திசைப்பரப்பெல்லாம் வெம்பிக் கிடக்கும் புல்லி
அரசன் நாட்டைத் தாண்டி அவர் சென்றிருந்தால் என்ன? 
அங்கு வாழும் மக்கள் வழியில் வரும் புதியவர்களையெல்லாம்
விருந்தோம்பிக் காப்பாற்றுவர். 
மேய்க்க ஓட்டிச் செல்லும் காளைமாட்டின் கழுத்தில் மூங்கில்
குழாயில் அடைத்துத் தனக்காக வைத்திருக்கும் புளிக் கட்டுச் சோற்றைத் தேக்கிலையில் பங்கிட்டுத்
தருவார்கள். 
காதை அடைக்கும் பசி தீரும் அளவுக்குத் தருவார்கள். 
அவர்களின் நாட்டைத் தாண்டிச்
சென்றிருந்தாலும், அருள்மொழி கூறி உன்னைத் தேற்றியவர் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க
மாட்டார். 
கவலைப்படாதே – என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை
இரும் பிடிப் பரிசிலர்
போலக் கடை நின்று,
அருங் கடிக் காப்பின்
அகல் நகர் ஒரு சிறை,
எழுதி அன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை
நாள், காவலர் மடிந்தென,
திறந்து நப் புணர்ந்து,
''நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல்''
எனப் பல் நாள்
பொம்மல் ஓதி நீவிய
காதலொடு,
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம்
வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணி,
கோவலர்
மழ விடைப் பூட்டிய
குழாஅய்த் தீம் புளி   10
செவி அடை தீரத்
தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு
உம்பர், செல் அருஞ்
சுரம் இறந்து ஏகினும்,
நீடலர்
அருள் மொழித் தேற்றி,
நம் அகன்றிசினோரே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. 
மாமூலனார் பாடல் 
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment