Pages

Monday, 3 October 2016

அகநானூறு Agananuru 310

உன்மேல் இவளுக்கு ஆசைதான். என்றாலும் ஊருக்கு வந்து திருமணம் செய்துகொண்டு இவளை பெறு” – தோழி தலைவனிடம் இப்படிச் சொல்கிறாள்.  

1
விரைந்து செல்லும் தேரையும், அதில் உன்னுடன் வந்த உன் மெய்க்காப்பாளர்களையும் விலக்கிவிட்டு நீ மட்டும் தனியே வந்திருக்கிறாய். நீ நெடுந்தகை முருகன் போன்ற ஈரத்தன்மை உடையவன். அன்றியும் தொழக்கூடிய தோற்றம் கொண்டவன். உன் நெஞ்சம் அழிந்து, பலநாள் வந்து, பணிந்து இவளைப் பணியவைக்கும் மொழியால் உரையாடுகிறாய். அதனால் குவளை மலர் போன்ற கண்களை உடைய இவளும் உன்மீது பித்துக்கொண்டவள் ஆகிவிட்டாள். இதனை நீ தெரிந்துகொள்.
2
இவள் தாய் வீட்டில் தன்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் பாராட்டும் காதலில் வளர்ந்தவள். அதனால் இவளுக்குச் சிறிது மடமை உண்டு. அதனால், குன்று போல் குவிந்திருக்கும் மணல் கொண்ட கடல்சார் நிலத் தலைவனே! இன்று இவளை இங்கு அடைய விரும்ப வேண்டாம்.
3
சென்றுவிடு. அங்கே இவள் ஊர் தோன்றுவதைப் பார். பூ விழிந்திருக்கும் புன்னைமரம். அருகே பனைமரம். இங்கிருந்து கூப்பிடு தூரந்தான். உமணர் உப்பு விற்கச் சென்ற வண்டியின் உச்சியில் ஏறிக்கொண்டு வந்து களைத்திருக்கும் பெண்-பறவை பறந்து ஓடும்படி, கடல்-அலை ஒலிக்கிறது. அந்த ஊருக்கு நீ வரலாம். திருமணம் செய்துகொள்ள வரலாம்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  நெய்தல்

1
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு 5
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
2
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!                   10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
3
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து     15
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது.
நக்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

குன்றின் தோன்றும் குவவுமணல் சேர்ப்பு

No comments:

Post a Comment