Pages

Monday, 3 October 2016

அகநானூறு Agananuru 308

இரவில் வேண்டாம்; பகலில் வருக; 
இவளைப் பெற்று இன்புறலாம்; 
தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.

1
புலியோடு போராடி, தளர்வுற்று நடக்கும் யானையின் விழுப்புண்ணை, கிழிபட்டிருக்கும் புண்ணை பனிக்கட்டியுடன் பொழியும் மழை கழுவும் இரவு வேளையில் வருகிறாய். 

வெண்ணிற அருவியில் ஒழுகும் நீர்த்துளி குயவன் மண்கலம் சுடும் புகைபோல் மலையை மறைக்கும் நாட்டை உடையவன் நீ.
2
இரவில் ஏன் வரவேண்டும்? பகலில் வரலாமே. 

கையில் வேலை வைத்துக்கொண்டு, இரவில் தினைப்புனம் காக்கும் என் தந்தை இதணம் என்னும் பந்தலில் ஏறி இருந்துகொண்டு யானையை ஓட்டுவான். 

பகலில் அந்த இதணத்தில் ஏறி நின்றுகொண்டு நாங்கள் கிளியை ஓட்டுவோம். 

எங்களோடு சேர்ந்து நீயும் கிளி ஓட்டலாம். 
அங்கு இருக்கும் சுனையில் அடைந்து கிடக்கும் குவளைப் பூக்களைப் பறித்து அணிந்துகொடிருக்கும்  இவள் கூந்தல் மெத்தையில் உறங்கலாம். 

பொழுது போகும் நேரத்தில், காவலர்ளை ஏமாற்றிவிட்டு விளைச்சலை மேய்ந்த ஆண்-யானை போல் குறிஞ்சி பூத்துக்கிடக்கும் உன் ஊருக்குத் திரும்பலாம்.

தலைவியைப் பெற வரலாமே, என்கிறாள், தோழி.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,          5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
2
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,             10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,                 15
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.

இரவு வருவானைப் ''பகல் வருக'' என்றது.
பிசிராந்தையார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இதணம்
எதியோப்பியா நாட்டில் 

No comments:

Post a Comment