தகுமா, என்று எண்ணிப் பாருங்கள்.
தோழி
தலைவனை வேண்டுகிறாள்.
1
இவளது சிறிய நெற்றியில் பசப்பு ஊரும்;தோள் சரியும்;அகன்ற அல்குல்-மடிப்புகள் வாடும்;இரவிலும் பகலிலும் இவள் மயங்கிக் கிடப்பாள்;மழையில் நனையும் மலரிலிருந்து நீர் ஒழுகுவது போல இவள் கண்ணீர் விட்டு வருந்துவாள்;என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் பொருள் ஈட்டுதலை விரும்பி, இவளை விட்டு நீங்குதல் தகுமா? ஐய! எண்ணிப் பாருங்கள்.
2
தன்னைக் கொல்ல வந்த வேங்கைப்-புலியின் பகையை வென்ற யானை, காம உணர்வால் ஒழுகும் மதம் பெருக்கெடுத்து, வழிப் போக்கர்களையும் கொல்லுவதால் ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில்,வலிமை மிக்க கையினை உடைய கரடி புற்றிலுள்ள கறையான் கூட்டைத் தோண்டும் வழியில்,கோயில் சுவரில் புற்று ஏற, கோயில் கொடிக்கம்பத் தூணில் நிலை கொள்ளாமல் கடவுள் விட்டுவிட்டுப் போன கோயிலை விட்டு விலகிச் செல்லாமல் அதன் சுவற்றில் வாழும் ஆண்-புறா தன் பெண்-புறாவைக் கூவி அழைக்கும் வழியில்,பெரிய கற்பாறைகளை உடைய மலைப்-பாதையில்,செல்ல நினைக்கிறாய்.தகுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்,என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''சிறு நுதல் பசந்து,
பெருந் தோள் சாஅய்,
அகல் எழில் அல்குல்
அவ் வரி வாட,
பகலும் கங்குலும் மயங்கி,
பையென,
பெயல் உறு மலரின்
கண் பனி வார,
ஈங்கு இவள் உழக்கும்''
என்னாது, வினை நயந்து, 5
நீங்கல் ஒல்லுமோ ஐய!
வேங்கை
2
அடு முரண் தொலைத்த
நெடு நல் யானை
மையல் அம் கடாஅம்
செருக்கி, மதம் சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
பெருங் கை எண்கினம்
குரும்பி தேரும் 10
புற்றுடைச் சுவர புதல் இவர்
பொதியில்,
கடவுள் போகிய கருந்
தாட் கந்தத்து
உடன் உறை பழமையின்
துறத்தல் செல்லாது,
இரும் புறாப் பெடையொடு
பயிரும்
பெருங் கல் வைப்பின்
மலைமுதல் ஆறே? 15
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைமகனைச் செலவு விலக்கியது.
மதுரை ஈழத்துப் பூதன்
தேவனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment