Pages

Saturday 1 October 2016

அகநானூறு Agananuru 304

மழை பொழிந்து உயினங்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. 
நான் போர்ப்-பாசறையில் இருக்கிறேன். 
என்னவள் என்னை நினைத்து நொந்துகொண்டிருப்பாளோ?

1
மேகம் வானத்தை மூடி மழை பொழிகிறது. நீர் நிறைந்த நுங்கு போலவும், பேய் கண்ணீர்த் துளிகள் போலவும் மழை-ஆலிக் கட்டிகள் நீரில் விழுந்து மிதக்கின்றன. பெருமழை நின்று சாரல்-மழைத் தூறல் விழுகிறது. வைகறை முடிந்து விடிந்துகொண்டிருக்கும் காலம்.
2
செந்நிற மணல்-படிவு தெரியும்படி தெளிந்து ஓடும் நீரைப் பருகிய பெண்மான் தன் குட்டியையும், ஆண்மானையும் தழுவிக்கொண்டு, குருந்த மரத்தடியில் தங்கியிருக்கிறது.
3
வண்டுகள் ஊதுவதால் பிடவம் பூக்கள் மலர்கின்றன. மயில்கள் ஆடுகின்றன. மணிக்கற்களோடு கலந்துகிடக்கும் பவளக் கற்கள் போல காயாம்-பூக்கள் அழகுடன் பூத்துக் கிடக்கின்றன. வானில் ஈயலும், தரையில் மூதாய்ப் பூச்சிகளும் நிறைந்து செல்கின்றன.
4
“இப்படி நிலமெல்லாம் அழகுடன் திகழும் கார்-காலத்தில் அவர் போர்ப்பாசறையில் வேறிடத்தில் வேந்தனின் வினையைத் தான் மேற்கொண்டு செய்துகொண்டிருக்கிறார். எனக்கு அருள் புரியாத அவர் அறநெறியாளர் அல்லர்” என்று என்னோடு பிணக்குப் போட்டுக்கொண்டு என் மாயவள் நொந்துகொண்டிருப்பாளோ? என் நிலைமை அவளுக்குத் தெரியாதே.
தலைவன் இப்படி எண்ணி மனம் தடுமாறுகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  முல்லை

1
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,       5
2
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,     10
3
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,             15
4
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
''ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர் அல்லர், நம் அருளாதோர்'' என,
நம் நோய் தன்வயின் அறியாள்,              20
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

காயா
ஈயல் மூதாய்
ஈயல் | ஈசல்

No comments:

Post a Comment