Pages

Saturday 1 October 2016

அகநானூறு Agananuru 302

பருவத்தால் என்னைப் பறிகொடுத்து விடுவேனாம், தாய் நினைப்பு. 

1
காட்டில் வளரும் செவ்வாழையின் இலை காற்று அடிக்கும்போது யானையின் முதுகைத் தடவிக்கொடுக்கும் நாட்டின் தலைவன் அவன்.
2
அவனோடு சேர்ந்து அருவியில் ஆடினோம். 
சுனையில் நீல மலர்களைப் பறித்தோம். 
வேங்கை பூத்து மணக்கும் சோலையில் விருப்பத்துடன் விளையாடினோம். 

அன்புக்குரிய என் தோழியே! 
இனி அப்படி விளையாட முடியாது போல் இருக்கிறது.
3
மலையடுக்கத்தில் என் தந்தையும் அண்ணனும் உழுது பயிரிட்ட தினை கரும்பு போல் உயர்ந்து பெரிய கதிர் விட்டுக் கிளிகள் கவரும்படி விளைந்திருக்கிறது. 

இது தாய்க்கு நன்றாகத் தெரியும். 
தெரிந்திருந்தும் தினைப்புனம் காக்கச் செல்க என நம்மை அனுப்பமாட்டாள் போல இருக்கிறது. 

அவள் என்னை உற்றுப் பார்க்கிறாள். 
சில மடிப்புகளுடன் நெருக்கமாக வீங்கும் என் முலையைப் பார்க்கிறாள். 

தழைத்திருக்கும் என் கூந்தலைப் பார்க்கிறாள். 
திரும்பத் திரும்பப் பார்க்கிறாள். 

(பருவத்தைப் பறிகொடுத்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டு பார்க்கிறாள்) 

அவள் அறநெறி இல்லாதவள். 
என்ன செய்வேன்? 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
2
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,  5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி!
3
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,                  10
கிளி பட விளைந்தமை அறிந்தும்,'' செல்க'' என,
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை,
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.              15

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

செவ்வாழை மரம்

செவ்வாழைப் பழம் 

No comments:

Post a Comment