Pages

Saturday 1 October 2016

அகநானூறு Agananuru 301

ஊரில் ஆட்டம் காட்டி மகிழ்வித்த கோடியர் அடுத்த ஊருக்குப் போன-பின் வெறிச்சோடிக் கிடக்கும் ஊர் போல, அவர் பொருளீட்டப் போன பின்னர் என் வாழ்க்கை வெறிச்சோடிக் கிடக்கிறது – என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

1
தோழி! வறண்டு கிடக்கும் வயலில் பயிர் வாடுவது போல, பிரிந்து சென்றவரை நினைத்துக்கொண்டு, வருந்தாதே. பிரிவைச் சற்றே பொறுத்துக்கொள் என்கிறாய்.
2
ஆட்டம் காட்டும் கோடியர் கூட்டம், ஆடிய மன்றம் அவர்கள் போய்விட்ட மறுநாள் ஆரவாரம் மிக்க ஊருக்கே இன்பம் தராது.
 
ஆட்டக்காரக் கோடியர்,
  • ஆட்டத்துக்குத் தரும் கூலியைக் கொண்டு உண்டு வாழ்வர். 
  • சேமித்து வைக்காமல் உண்டு மகிழ்வர்.
  • இதுதான் தமக்கு ஊர் என்று இருக்காமல் முதலை வாயைப் பிளந்தது போன்ற சக்கரம் கொண்ட வண்டியில் காட்டு வழியில் ஊர் ஊராகச் சென்று வாழ்க்கை நடத்துவர். 
  • மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுவர்.
  • அங்கே கிணை முழக்கி மகிழ்வர்.
  • ஆண்கள் எருக்கம்பூக் கண்ணியைத் தலையில் அணிந்திருப்பர்.
  • பெண்கள் ஆவிரை என்னும் ஆவாரம்பூ மாலையை முலையில் தொங்கும்படி அணிந்திருப்பர்.
  • இரவில் தாமரைப் பூப் போல் எரியும் விளக்கு வைத்துக்கொள்வர்.
  • ஆண்யானையும் பெண்யானையும் எழுப்பும் ஒலி சேர்ந்து கேட்பது போல் அவர்கள் கொம்பு ஊதும் ஒலியும் முழவு-ஒலியும் கேட்கும்.
  • வானத்தில் இடி முழங்குவது போலவும், மழைநீரில் தவளை ஒலிப்பது போலவும் சில்லரி இசைக்கருவியை முழக்குவர்.
  • பல வகையான இசைக்கருவிகளை முழக்கும்போது சீர் அமைத்துப் பாடுவர்.
  • ஊர் ஊராகச் சென்று ஆடுவர்.
  • பல வகையான இசைக் கருவிகளை அவற்றிற்கு உரிய பைகளில் போட்டு எடுத்துச் செல்வர்.
கோடியர் வாழ்க்கை இப்படிப்பட்டது.
3
கோடியர் ஆடிவிட்டுப் போனது போல்தான் காதலர் காதல் செய்துவிட்டுப் போன என் வாழ்க்கை உள்ளது. அதனை என்னால் மறக்க முடியுமா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
''வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம்'' என்றி தோழி!
2
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,            5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர்தீது இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
பாடு இன் தெண் கிணை கறங்ககாண்வர,     10
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்பமகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,    15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணசீர் அமைத்து,
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு    20
பல் ஊர் பெயர்வனர் ஆடிஒல்லென,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின்வழி நாள்,
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; 25
3
அதுவே மருவினம்மாலைஅதனால்,
காதலர் செய்த காதல்
நீடு இன்று மறத்தல் கூடுமோமற்றே?

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.
அதியன் விண்ணத்தனார் பாடல்
301-400 பாடல்கள் நித்திலக் குவியல் என்னும் தொகுப்பாக உள்ளது.

கி.மு. காலத்துப் பாடல்


குறுநெடுந்தூம்பு | கொம்பு


குறுநெடுந்தூம்பு | கொம்பு



No comments:

Post a Comment