தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
1
நிலத்தில் தேங்கிய நீர் இல்லை.நிலத்தில் ஊறும் நீர் தரும் சுனை வறண்டு போயிற்று.குன்று முகடுகள் சரிகின்றன.கடுமையான வெயில் காய்கிறது.கோடைக்காலம் நீள்கிறது.காணும் திசையெல்லாம் வெக்கை (வேய்).
2
நிலாப் போல் வெள்ளை நிறம் கொண்ட தந்தங்களையும், பெரிய கையையும் கொண்டு வேங்கைப் புலியை வென்றதும், அச்சம் தரும் பருத்த தோளினை உடையதுமான ஓங்கி உயர்ந்த யானை தளர்ந்து வலிமை (மதம்) குன்றி, பல மரங்கள் இருக்கும் பகுதியில் தன் பெண்யானையுடன் இருக்கும் கல்லுப்பாதையைக் கடந்து அவர் சென்றுள்ளார்.
3
கடல் உப்பை விற்க உமணர் கூட்டமாகச் செல்லும்போது, தளரும் வண்டிமாடுகளுக்கும், அவர்களுக்கும், புதிய வழிப்போக்கர்களுக்கும் உதவும் வகையில், முரம்பு மண்ணை இடித்துத் தோண்டிய கூவல் கிணற்றில் நீர் ஊறும் குன்றம், புல்லி என்னும் அரசன் ஆளுகைக்கு உட்பட்ட குன்றம் (வேங்கட மலை).
4
ஆள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள காட்டில் வடுகர் வில்லும் கையுமாகத் திரிவர். பழத்தில் பிழிந்த கள்ளை உட்கொண்டு, களித்து ஆரவாரம் செய்வர். அதனைத் தாண்டினால் தமிழிலிருந்து பெயர்ந்த மொழி வழங்கும் தேயம். அங்கு அவர் சென்றிருந்தாலும் பழி இல்லாமல் வாடிக்கிடக்கும் உன் உடல்நலத்தை அவர் மீட்டுத்தருவார்.
5
மழைக்காலத்தில் பூக்கும் செம்முல்லை போல் கடைப்பகுதி சிவந்திருக்கும் உன் ஈரக் கண்கள், மணம் கமழும் கூந்தல், அழகால் வருத்தும் தோள் ஆகியவற்றின் நலத்தை மீட்டுத் தருவார். கவலை வேண்டா.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
நிலம் நீர் அற்று
நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய,
கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய்
படு நனந்தலை,
2
நிலவு நிற மருப்பின்
பெருங் கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெரு
வரு பணைத் தோள் 5
ஓங்கல் யானை உயங்கி,
மதம் தேம்பி,
பல் மர ஒரு
சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம்
நீந்தி,
3
கடல் நீர் உப்பின்
கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப
அசைஇ, முரம்பு இடித்து 10
அகல் இடம் குழித்த
அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர்
அசை விட ஊறும்,
புடையல் அம் கழற்
கால் புல்லி குன்றத்து,
4
நடை அருங் கானம்
விலங்கி, நோன் சிலைத்
தொடை அமை பகழித்
துவன்று நிலை வடுகர், 15
பிழி ஆர் மகிழர்,
கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம்
இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண்
நலம் தருகுவர் மாதோ
5
மாரிப் பித்திகத்து ஈர்
இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட
செங் கடை மழைக் கண், 20
மணம் கமழ் ஐம்பால்,
மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட
மென் தோளே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
மாமூலனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment