Pages

Tuesday, 27 September 2016

அகநானூறு Agananuru 288

வராதே, 
விலகிச் செல். 
திருமணம் என்றால் வா. 
தலைவி கூறுவது போல் 
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

1
செல்க. 
உன் உள்ளம் வாழ்க. 
உன் மலையில் விளைந்த சந்தனத்தை உன் மார்பில் பூசிக்கொண்டிருக்கிறாய். 
உன் மலைச்சாரலில் பூத்த வேங்கைப் பூவை முருகப் பெருமான் போலத் தலையில் சூடிக்கொண்டிருக்கிறாய். 
கொளுத்தி உரமிட்ட வயலில் விளைந்திருக்கும் தினை துன்புறும்படி நாள்தோறும் வருகிறாய். 
(உன்னோடு சேர்ந்திருப்பதால் தினைப்புனம் காவல் கெட்டு தினை விளைச்சல் பாழாகிறது)
வருவோனே!
2
பலாப்பழம் பழுத்திருக்கும் மலையடுக்கத்தில் என் தலைவியைத் தனிமையில் கண்டு எளிமையாகப் பயன்படுத்திகொண்டாய்.
3
வழிப்போக்கர்களைக் கொள்ளையிடக் கொடியவர்கள் தேடித் திரியும் வழி இது. 
வழி உண்டாக்கிக்கொண்டு பாயும் அருவி ஓரத்தில் குட்டிகளை உடைய மந்தியின் பசியைப் போக்குவதற்காகக் குட்டிகளின் தந்தை பலாப் பழத்தைத் தோண்டித் துன்புறும் மலையடுக்கம் கொண்ட ஊர் மாங்காடு. 
அந்த மாங்காட்டுக்கு இருக்கும் கட்டுக்காவல் போல இவள் தந்தை இவளைக் கட்டிக் காக்கிறான்.
இவள் மாசறக் கழுவிய கூந்தலை உடையவள். 
கொத்துக்கொத்தாக மாம்பூ உதிரும் தழைத்த கூந்தலை உடையவள். 
இனிய மொழி பேசுபவள்.
இனி, உன் மனம் போல் எளிமையாக இவளைப் பெறமுடியாது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,           5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
2
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
3
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி 10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்    15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.

பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
விற்றூற்று மூதெயினனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


மாம்பழம் தொடும் குரங்கு

பலாப்பழம் தொடும் (தோண்டும்) குரங்கு

No comments:

Post a Comment