Pages

Friday 23 September 2016

அகநானூறு Agananuru 284

காதலன் காதலி இருக்கும் ஊரை நினைத்துப் பார்த்து மகிழ்கிறான்.


தோற்றத்தில் சிறிய இலை கொண்ட நெல்லிக்காய் போன்ற கண் கொண்ட முயல், முடம் பட்டு விளைந்திருக்கும் வரகின் கதிரை உண்ணும். 

தண்ணீர் உண்ணும் குடங்கை, போன்ற தன் காது வளையாமல் கொடிப் புதருக்குள் ஒடுங்கி உறங்கும். 

பின் எழுந்து தன் துணைமுயலுடன் காட்டுமுற்றத்தில் கொஞ்சமாகத் தெளிந்திருக்கும் நீரைக் கண்டறிந்து உண்ணும். 

இப்படிப்பட்ட முல்லைநிலம் தருவிய ஊர் சிறுகுடி. 
கற்பாறைகள் நிறைந்த ஊர் சிறுகுடி. 
அந்த ஊரில் வாழும் மறவர் தினையரிசியில் காய்ச்சிய கள்ளை உண்பர். 

கையில் தெறிகோல், விசைக்கும் வில் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வேட்டைக்குச் செல்வர். 

முல்லைக்காட்டில் மானைத் தேடுவர். 
அவர்கள் வாழும் இடந்தான் என் காதலி அம்-மா-அரிவை வாழும் ஊர். 

அவள் என்னைக் காட்டிலும் காம உணர்வு மிக்கவள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை

சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,                     5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்       10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது;
தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

முயல் | நெல்லிக்காய் போன்ற முட்டைக்கண்

நெல்லிக்காய்

வரகு 

தெறிகோல் | தெறித்துத் தாக்கும் கோல்

Pit-making hand
குடந்தை | குடங்கை
குடங்கை போல் காது கொண்டது முயல்

No comments:

Post a Comment