தலைவியின் திருமணச் சடங்குக்குப் பொங்கல் வைக்கும் தோழி சொல்கிறாள்.
1
கானவன் பெருமலையில் வேட்டைக்குச் செல்கிறான்.திருப்புமுனை கொண்ட அம்பும் வில்லும் கொண்டுசெல்கிறான்.தன்னோடு போரிடும் யானையைக் கொன்று அதன் தந்தத்தை எடுத்ததுக்கொண்டு அதனால் தண்ணீர் ஊறும் மண்ணைப் பொன்னுக்காகத் தோண்டுகிறான்.பொன்னுடன் மணிகளும் கிடைக்கின்றன.தோண்டும் தந்தத்தின் நுனி ஒடிந்துவிடுகிறது.ஒடிந்த தந்தத் துணுக்குகள் நீரில் மழைநீர்ப் பனிக்கட்டி போல் நீரில் முத்துக்களாக மிதக்கின்றன.இப்போது அவனுக்குப் பொன், மணி, தந்த-முத்து ஆகிய மூன்று செல்வங்கள் கிடைத்துள்ளன.அவற்றை நறைக்கொடி நாரால், சந்தனக் காவுமரத்தில் (கட்டித் தூக்கும் மரம்) மரத்தில் கட்டிச் சுமந்துகொண்டு வருகிறான்.அவன் வேங்கைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்திருக்கிறான்.இப்படிப்பட்ட கானவன் வாழும் நாட்டின் தலைவன் உன் தலைவன்.தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம்.பொன்னும், மணியும், முத்தும் சந்தனக் கா மரத்தில் மணக்கும் நறை-நாரால் கட்டி மணமகன் வீட்டார் கொண்டுவருகின்றனர்.
2
மணமகளாகிய தலைவியின் தந்தை பலாப்பழச் செல்வ-வளம் மிக்கவன்.இவன் அவர்களை எதிர்கொள்கிறான்.கொடையாகத் தன் மகளை மணம் செய்து கொடுக்கிறான்.அலரும் அம்பலுமாச் சொல்லித் தூற்றிய ஊரார் வாய் இப்போது திருமண நிகழ்வு பற்றிப் பேசுகிறது.உன் தாய் “அவனே உன் தோளுக்கு உகந்தவன்” எனப் பாராட்டுகிறாள்.நான் “விரைந்து வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டு என் தோளுக்கு நேராக என் கைவிரல்களைக் கூப்பி-நின்று வரவேற்கிறேன்.இல்லத்தில் வாழும் கடவுளுக்குப் படைக்கப் பொங்கல் வைக்கிறேன்.மகிழ்ச்சிதானே!
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
பெரு மலைச் சிலம்பின்
வேட்டம் போகிய,
செறி மடை அம்பின்,
வல் வில், கானவன்
பொருது தொலை யானை
வெண் கோடு கொண்டு,
நீர் திகழ் சிலம்பின்
நன் பொன் அகழ்வோன்,
கண் பொருது இமைக்கும்
திண் மணி கிளர்ப்ப, 5
வைந் நுதி வால
மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி
கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன்
கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக,
நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
2
இன் தீம் பலவின்
ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு
மொழியும்;
சாய் இறைத் திரண்ட
தோள் பாராட்டி,
யாயும், ''அவனே'' என்னும்; யாமும், 15
''வல்லே வருக, வரைந்த
நாள்!'' என,
நல் இறை மெல்
விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு
ஆக்குதும், பலியே!
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி
தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது;
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
தொல் கபிலன் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
ஆங்கில விளக்கம் பாடல்
கும்பிட்டு வரவேற்கும் தமிழர் பண்பாடு இப்பாடலில்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இறை = கையிலுள்ள மணிக்கட்டு
விரல் கூப்பி “வருக” என்றனர்.
இக்காலத்தில் “வாருங்கள் வாருங்கள்” | “வாங்க
வாங்க” என்று சொல்லிக்கொண்டு கை கூப்பி வரவேற்கின்றனர்.
''வல்லே வருக, வரைந்த
நாள்!'' என,
நல் இறை மெல்
விரல் கூப்பி,
No comments:
Post a Comment