தாய்
தன் மகள்
காதலனுடன் சென்றதை
ஊர் மக்களிடம்
சொல்லி வருந்துகிறாள்.
1
என் மகள் உயர்ந்த தாழியில் மண் போட்டு வயலைக் கொடியை அதில் வளர்த்தாள்.கையைக் குவித்துக் குழியாக்கிக் கொண்டு (குடையாக்கிக்கொண்டு) தண்ணீர் கொண்டு வந்து அதற்கு ஊற்றினாள்.பந்தலில் கொடியை ஏற்றிவிட்டாள்.இது அவள் விளையாடிய ஒரு விளையாட்டு.பந்தை எறிந்து பிடித்து விளையாடினாள்.இது மற்றொரு விளையாட்டு.தன் இளமைக்கு ஏற்ப வளமனை கட்டிச் சிற்றில் விளையாடினாள்.இது இன்னொரு விளையாட்டு.தண்ணீர் அள்ளிக்கொண்டு செல்லும்போது “கைக்குடையில் ஒழுகும் நீர் வெண்ணிற நீறு ஆகட்டும்” என்று நான் கூறுவேன்.“ஆகட்டும்” என்று தன் மழலை மொழிகளால் என் உயிரில் கலப்பது போல் சொல்லிக்கொண்டு விளையாடுவாள்.இந்த இல்லம் வந்தவர்களுக்கெல்லாம் பெருஞ்சோறு வழங்கும் இல்லம்.இந்த இல்லத்தில் ஓரிடத்தில் தங்கி இருக்காமல் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருப்பாள்.அவள் நல்லழகு (நன்னுதல்) கொண்டவள்.
2
எந்த உறவும் இல்லாத ஏதிலாளன் காதலை நம்பி, நேற்றுக் காட்டுவழியில் என் மகள் சென்றுவிட்டாள்.வெள்ளை நிறத்துடன் துளை கொண்டிருக்கும் இருப்பைப் பூவைக் கரடிக்கூட்டம் உண்ணும் வழியில் சென்றுவிட்டாள்.நிலம் பெருமூச்சு விடும் கடத்தற்கு அரிய பாலைநில வழியில் சென்றுவிட்டாள்.என்னை இங்கே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.அறியா மடமைத் தகைமை உடையவள் அவள்.
3
அவளுக்குத் தழையாடை புனைய உதவும் நொச்சிக்கு அடியில், அவள் தன் காதலன் வருவானா என்று விரலால் “கூடல்” கோடு போட்டுப் பார்த்ததை இங்கே வந்து பாருங்கள்.இரக்கம் உடையோர் வந்து பாருங்கள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
ஓங்கு நிலைத் தாழி
மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின்
மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து
எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள
மனைக் கிழத்தி!
''பிதிர்வை நீரை வெண் நீறு
ஆக'' என, 5
யாம் தற் கழறுங்
காலை, தான் தன்
மழலை இன் சொல்,
கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக்
கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து
ஒருங்கு இவண் இராஅள்,
2
ஏதிலாளன் காதல் நம்பி, 10
திரள் அரை இருப்பைத்
தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங்
கிளை கவரும்
வெம் மலை அருஞ்
சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும்
இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெரு மடத்
தகுவி 15
3
ஐது அகல் அல்குல்
தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது,
என் மகள்
செம் புடைச் சிறு
விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
மகட் போக்கிய தாய்
சொல்லியது.
கயமனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment