Pages

Tuesday 20 September 2016

அகநானூறு Agananuru 274

இடையன் மடி விடு வீளை


வானம் இடி முழங்கிப் பெருமழை பொழியும் நள்ளிரவு. 
தலையை ஆட்டும் செம்மறி ஆடுகள் பாதுகாப்பாக இருப்பதற்காக இடையன் அவற்றுடன் தனியே நிற்கிறான். 
தீக்கடைக்கோலில் மூட்டிய தீ அவனது தொங்கும் பந்தத்தில் எரிந்துகொண்டிருக்கிறது. 

பால்-பானை, 
அதனைத் தாங்கும் வலிமையான கயிற்றால் கட்டிய உறி, 
நனையாமல் ஒருபக்கம் போர்த்தியிருக்கும் தோல், 
ஒருபக்கம் வீசும் நீர்த் திவலைகளில் நனையும் உடல், 
கையில் ஊன்றுகோல் ஆகியவற்றுடன் நிற்கிறான். 

கைவிரலை மடித்து வாயில் வைத்து வீளை ஒலி எழுப்புகிறான். 
அந்த ஒலியைக் கேட்டு குட்டிகளைப் பிடிக்க வரும் குள்ளநரிக் கூட்டம் பயந்து முள்ளுக்காட்டில் பாய்தோடுகிறது. 

இப்படிப்பட்ட முல்லை நிலத்தில்தான் என் குறுமகள் வாழும் ஊர் இருக்கிறது.

குறுமகள் மென்மையானவள்; தலைவன் பிரிவை ஆற்றிக்கொண்டு காத்திருக்கும் முல்லை-ஒழுக்க-நெறிப் பண்பில் மேம்பட்டவள்.

அர நலிந்து = மோதிக்கொண்டதால் மேகங்கள் நலிந்துபோயினவாம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை

இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,     5
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,  10
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.

தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
இடைக் காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இடையன் (இக்காலம்) 

No comments:

Post a Comment