Pages

Monday, 19 September 2016

அகநானூறு Agananuru 271

நீ பிரிந்து சென்றால் இவள் தோள் வாட்டத்தைப் போக்க மருந்து வேண்டுமே, என்று தோழி வினவியது கேட்டு, தலைவன் தன் பிரிவைத் தவிர்த்துவிடுகிறான்.

1
சிவந்த காலை உடைய வரிப் புறாவின் ஆண்பறவை தன் பெண்பறவையோடு வெளியிடங்களுக்குப் பறந்து சென்று, சுடும் மணலில் இரையைத் தேடி உண்டுவிட்டு நீரைத் தேடி கானல்நீரைத் தேடிப் பறந்து வாட்டமுறும் மழையில்லாத வழியில் பொருள் தேடச் செல்லத் திட்டமிடுகிறாய்.
2
அந்த வழியில் உள்ள மலைப்பாறைகளைக் கடந்து நெடுந்தொலைவிலிருந்து வரும் புதியவர்களின் வாடும் உயிரைக் காப்பாற்றிய நெல்லி மரத்தில் அமர்ந்துகொண்டு அந்த இணைப் புறாக்கள் ஒன்றை ஒன்று அழைத்து அகவும்.
3
அந்த வழியில் சென்று, அங்கே இருந்துகொண்டு, பொருள் ஈட்டிவர நீர் நினைத்தீராயின், நும் செயல் வல்லமை உடையது ஆகட்டும்.
4
களிப்பு மிக்க கள்ளூரை ஆளும் அரசன் அவியன் நாட்டில், மழைமேகத்தைச் சூடிக்கொண்டுள்ள மலைப்பிளவில் விளைந்திருக்கும் மூங்கிலில் இரண்டு கணுக்களுக்கு இடையை உள்ள பகுதி போல் அழகு கொண்ட தோளினை உடைய இவள் வாடினால், அந்தத் தோள்-வாட்ட-நோயைப் போக்கும் மருந்து நீ பொருள் தேடும் நாட்டில் இருக்கிறதா? – இது தோழியின் வினா.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
2
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,                  5
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
3
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர் எனினே,            10
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
4
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,    15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?

செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
பொறிவரிச் செங்கால் புறாக்கள்

No comments:

Post a Comment