காதலியுடன் கலந்திருக்கும் போதும் ஊருக்குத் திரும்புவதையே காதலன் நினைத்துக்கொண்டிருக்கிறான். தோழி திருமணம் செய்துகொள்ளுமாறு அவனை வற்புறுத்துகிறாள்.
1
இனமீன் வேட்டுவர் கழியில் மலர்ந்த நீல மலரையும், கரை மரத்தில் மலர்ந்த ஞாழல் மலரையும் சூடிக்கொள்வர்; புலால் நாற்றம் வீசும் சிறுகுடிப் பாக்கத்தில் வாழ்வர்.அவர்கள் வாழும் புலம்பு நிலத்தின் தலைவன் நீ.உன்னை நினைத்து இவள் தோள் வாடுகிறது.
2
இறா மீன் மண்ணைக் கிண்டிய நீர்நுரையை புன்னை மரத்தின் கிளை வளைந்து தொட்டுக்கொண்டிருக்கும் கானல் நிலத் துறையை நோக்கிக்கொண்டு இவள் வாடுகிறாள். (அவளும் அவனும் கூடுமிடம்)
3
குதிரை மேலும், தேர் மேலும் வந்து கொடை வழங்கும் கோமகன் குட்டுவன்.அவன் ஊர் கழுமலம் போல அழகிய மேனி கொண்டவள் இவள்.இவளது அந்த நலம் தொலைந்து, கண்ணுறக்கம் இல்லாமல் துன்பப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.
4
நீயோ, கடவுள் இருக்கும் முள்மரத்தில் கட்டியிருக்கும் கூட்டில் கருநிறப் பெண்பறவை தன் சேவல் தன்னைப் புணராததால் துன்புறும் நள்ளிரவிலும் உன் ஊருக்குச் செல்வதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு வருத்தமாக இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு இவளுடனேயே இருக்கவேண்டாமா?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்
1
இருங் கழி மலர்ந்த
வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப்
பாக்கத்து
இன மீன் வேட்டுவர்,
ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப!
நெகிழ்ந்தன, தோளே;
2
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப்
படு திரை 5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத்
தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி,
இவளே,
3
கொய் சுவற் புரவிக்
கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன்
கழுமலத்து அன்ன,
அம் மா மேனி
தொல் நலம் தொலைய, 10
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
4
கடவுள் மரத்த முள்
மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு
கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும் ஊர் உள்ளுவை;
நோகோ, யானே. 15
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத்
தோழி வரைவு கடாயது.
சாகலாசனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment