Pages

Sunday, 18 September 2016

அகநானூறு Agananuru 267

பிரிந்தவர் மேல் தவறு ஒன்றும் இல்லை. வளையலை நழுவ விடும் என் தோள்தான் தவறு செய்கிறது, என்கிறாள், தலைவி.

1
என் நெஞ்சுக்குத் தக்கவாறு பேசி, அன்பு கலந்து, “பிரியமாட்டேன்” என்று வஞ்சினம் கூறியவர், பிரிந்து சென்று வினையாற்றுபவர், வினை முடிந்த பின்னர் வராமல் இருக்கமாட்டார். அவர் சென்ற நாட்களைச் சுவரில் நாள்தோறும் அடையாளக்கோடு போட்டுக் ஒவ்வொரு நாளும் கையால் ஒற்றி எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டு வருந்தாதே, தோழி, என்கிறாய். அது சரிதான்.
2
கோடைக் காற்று மரக் கிளைகளில் பாய்ந்து இருப்பைப் பூக்களை உதிர்க்கும். அச்சம் தரும் காட்டு வழியில் அந்த இருப்பைப் பூக்கள் பூனையின் காலடி போல் உதிர்ந்து கிடக்கும். அவற்றைக் காலில் மயிர் கொண்ட கரடிக் கூட்டம் விரும்பி உண்ணும்.
3
மை தீட்டியது போல் கருமையான முகம் கொண்ட முசுக் குரங்கு உயர்ந்த மூங்கிலில் தாவும். அப்போது மூங்கில் நெல் உதிரும். கோடைக் கால மண் சூட்டில் மூங்கில் நெல் பொறியும். நெல் பொறியும் அந்த ஓசை விரல்களில் நெட்டி முறிக்கும் ஓசை போல் கேட்கும். அப்படி மூங்கில் நெல் பொறியும் மலைக் காட்டு வழிகள் பலவற்றைக் கடந்து அவர் சென்றுள்ளார். உண்மையில் அவர் பழி உடையவர் அல்லர்.
4
விரும்பியவர் வினையாற்றிக்கொண்டிருத்தலை எண்ணிப் பார்த்து மனத்தில் தெளிவு பெறாமல், நாள்தோறும் வளையல்கள் கழன்று விழும்படிச் செய்துகொண்டு, மெலியும் என் தோள்களே தவறு செய்கின்றன.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''நெஞ்சு நெகிழ் தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று?'' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
2
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,     5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
3
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென     10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
4
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை    15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

விரலில் நெட்டி முறித்தல்
சுடுமண்ணில் விழுந்து மூங்கில் நெல் பொரிவது விரலில் நெட்டி முறிக்கும் ஒலி போல் கேட்குமாம்

விரலில் நெட்டி முறித்தல் காணொளிப் படம்

நெட்டி முறித்தல் போட்டி காணொளிப் படம் 

No comments:

Post a Comment