காதலி தன்னை ஏற்றுக்கொண்ட செய்தியைத்
தோழி
சொல்லக் கேட்டுத் தலைவன் மகிழ்கிறான்.
எவ்வாறு மகிழ்கிறான்?
1
முள்ளுக்காட்டை வெட்டி எரித்து உருவாக்கிய விளைநிலம் ‘முதை’.முதை நிலத்தை உழுது பயறு விதைத்திருந்தனர்.விளைந்திருந்த அந்தப் பயற்றங்கொடியை, பசு ஒன்று வயலில் புகுந்து மேய்ந்துவிட்டது.
2
இந்தக் குற்றத்துக்காக, ஊர் மன்றம் கூடித் தீர்ப்பளித்து பசு மேய்த்தவன் கண்ணை இரக்கம் இல்லாமல் தோண்டிவிட்டனர்.கண்ணைத் தோண்டியவர் முது-கோசர் இனத்தவர்.கண் தோண்டப்பட்டவன் ‘வாய்மொழி’ என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட மற்றொரு கோசர் குடியினன்.
3
கண் தோண்டப்பட்டவன் ‘அன்னிமிஞிலி’ என்பாளின் தந்தை.தந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவள் வருந்தினாள்.வஞ்சினம் கொண்டு பாடுகிடந்தாள் (சத்தியாக்கிரகம் செய்தாள்).உண்கலத்தில் உணவு உண்ணவில்லை.துவைத்த ஆடை உடுத்தவில்லை. (கட்டிய ஆடையுடனேயே இருந்தாள்)இந்த நோன்புக் கோலத்துடன் திதியன் என்னும் அரசனிடம் முறையிட்டுக்கொண்டாள்.திதியன் வீரம் மிக்க பெரும் படையை உடையவன்.குறுநில மன்னன் (குறும்பியன்).கண்ணைத் தோண்டியவர்களைத் திதியன் கொன்றான்.பின்னர் அன்னிமிஞிலி சினம் தணிந்தாள்.
4
அன்னிமிஞிலி மகிழ்ச்சியில் திளைத்தாள்.அவளைப் போல நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், என்கிறான் தலைவன்.பேகன் கொண்டல் மலையின் தலைவன்.(கோடைமலை என்பது கொடைக்கானல், கொண்டல் மலை என்பது பழனிமலை எனப்படும் பொதினிமலை)அருவி முழங்கும் மலை, கொண்டல்மலை.அந்த மலையின் மணம் போல ஒரு செய்தி வந்துள்ளது.என் காதலி என்னிடம் வருவதாகச் சொல்லிவிட்டாள்.அதனால் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், என்கிறான் தலைவன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
முதை படு பசுங்
காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட
உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி,
ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு
ஆ புக்கென,
2
வாய் மொழித் தந்தையைக்
கண் களைந்து, அருளாது, 5
ஊர் முது கோசர்
நவைத்த சிறுமையின்,
3
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக்
கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல்
மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன் உயிர் செகுப்பக்
கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
4
ஆனா உவகையேம் ஆயினெம்
பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம்
திகழ் சிலம்பின்
நுண் பல் துவலை
புதல்மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின்
வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை
நாறி,
அம் தீம் கிளவி
வந்தமாறே.
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்



No comments:
Post a Comment