Pages

Thursday, 15 September 2016

அகநானூறு Agananuru 260

பொழுது புலர்கிறது. 
மலை தன் நிறத்தைக் காட்டுகிறது. 
வண்டுகள் மலரில் தேன் உண்கின்றன. 

கண்டல் மரத்தில் இருக்கும் குருகுகள் ஒலி எழுப்புகின்றன. 
இரவில் வீசிய கடலலைகள் குறைந்துள்ளன. 

இரவில் மீன் பிடித்த திமில் படகுகள் ஓய்ந்து கிடக்கின்றன. 
கரையேறி விளையாடும் நண்டுகள் வளையல் பதுங்கிக்கொள்கின்றன. 

காலை வானம் சிவந்து தோன்றுகிறது. 
இரவில் மேயும் அன்றில் தன் துணையுடன் பனைமர மடலுக்குச் செல்கிறது. 

கழியில் பூத்த பூக்கள் தன் முகத்தை மூடிக்கொள்கின்றன. 
வீட்டில் இருக்கும் புன்னைமரம் பொன் நிறத்தில் பூக்கிறது. 

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பகலை காலத்தைப் போக்கினேன்.

இரவு வந்தது.
இனி, என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை. 

பழைய மரத்தின் பொந்துகளில் வாழும் கோட்டான் திடீரெனக் குழறுகிறது. 
பேய் நடமாட்டம் உள்ள நள்ளிரவு இது.

என் நெஞ்சு பதறுகிறது.

அன்பில்லாத காதலன் என்னை ஏமாற்றும் அறிவை நம்பினேனே! 
என்ன ஆவேனோ?

தலைவி தன்னைத் தானே நொந்துகொள்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய,     5
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற,    10
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.        15

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது.
மோசிக் கரையனார்

கி.மு. காலத்துப் பாடல்

முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
ஆந்தை | கோட்டான் 

No comments:

Post a Comment