மணந்துகொள்ளத் தன்னுடன் காட்டு வழியில் வரும் தலைவியைத் தலைவன் பாராட்டுகிறான்
1
யாழ!பாதிரிப் பூக்கள் கோடையின் கொடுமையால் வாடி நாற்றம் அடிக்கும் காட்டில், சிலம்பு அணிந்த உன் கால்கள் சிவக்கும்படி, நான் செல்லும் வழயில், நீ வருகிறாய்.
2
பொங்கித் தாழும் உன் கூந்தலை அடங்கும்படி நான் வாரவேண்டும். மராம் பூவை அதில் சூட்டவேண்டும். அதில் மொய்க்கும் வண்டுகளை நான் ஓட்டிவிட வேண்டும். இதனை விலக்காதே.
3
இப்படி நான் உன்னை அழகுபடுத்திவிட்டால், வளையொலி கேட்கும்படி, தோளை வீசிக்கொண்டு நீ நடக்கமுடியும்.
4
வழிப்பறிக் கள்வர் வாழும் பகுதியில் யானை ‘யா’ மரத்தைப் பிளந்து உள்ளீட்டைத் தின்றுவிட்டு அதன் கோதுப் பகுதியை விட்டுவிட்டுச் செல்லும். அந்தக் கோது அவ்வழியாக உப்பு விற்கச் செல்லும் உமணர்களுக்கு அடுப்பு எரிக்க உதவும்.
5
துன்பம் தரும் காட்சியும் உண்டு. புற்றில் இருக்கும் கறையான் சோற்றை (கூட்டை) உண்பதற்காக, அதில் பதுங்கி இருக்கும் பாம்பு வெளிப்படும்படி, குட்டிப் போட்ட கரடி நள்ளிரவில் புற்றைக் கிண்டும்.
இந்தப் பாதையில் நாம் செல்கிறோம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
வேனிற் பாதிரிக் கூனி
மா மலர்
நறை வாய் வாடல்
நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின்
சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு
படீஇயர், யாழ நின்
2
பொம்மல் ஓதி பொதுள
வாரி, 5
அரும்பு அற மலர்ந்த
ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ,
வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல்
குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல்
தேற்றாய், அணி கொள
3
நுண் கோல் எல்
வளை தெளிர்க்கும் முன்கை 10
மெல் இறைப் பணைத்
தோள் விளங்க வீசி,
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
4
பகை மிகு கவலைச்
செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய
கவை முறி யாஅத்து,
நார் அரை மருங்கின்
நீர் வரப் பொளித்து, 15
களிறு சுவைத்திட்ட கோதுடைத்
ததரல்
கல்லா உமணர்க்குத் தீ
மூட்டு ஆகும்,
5
துன்புறு தகுவன ஆங்கண், புன்
கோட்டு
அரில் இவர் புற்றத்து
அல்கு இரை நசைஇ,
வெள் அரா மிளிர
வாங்கும் 20
பிள்ளை எண்கின் மலை
வயினானே.
உடன் போகாநின்ற தலைமகட்குத்
தலைமகன் சொல்லியது.
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment