Pages

Tuesday, 13 September 2016

அகநானூறு Agananuru 254

தலைவன் தன் தேர்ப்பாகனைப் பாராட்டுகிறான்.

1
தோழிமாரும், தோழன்மாரும் விளையாடுவர். 
முதுமையால் நரைத்த தலைமுடி கொண்ட செவிலியர் பாராட்ட விளையாடுவர். 
பொன்னால் செய்த கிண்கிணி காலில் ஒலிக்கும்படித் தோழியர் விளையாடுவர். 
மணல் முற்றத்தில் காலடி பதியும்படி விளையாடுவர். 

வீட்டில் வளர்க்கப்படும் காதல் புறாக்கள் சிறகுகளைக் கோதிக்கொண்டு இணைந்து விளையாடும். 

தோழர்களும், புறாக்களும் விளையாடுவதைக் பார்க்கும்போதெல்லாம் என் மனைவி என்னை நினைத்துப் புலம்பிக்கொண்டிருப்பாள். 

அவள் துன்பம் நீங்கவேண்டும்.
2
வேந்தன் ஆணைப்படி வேற்றுநாட்டில் நம் பணியை முடித்துவிட்டோம்.
கட்டிக்கிடத்தலை விரும்பாத உன் குதிரைகளைத் தெரில் பூட்டு. 
பூ பூத்து மணக்கும் மின், தளவம், முல்லை ஆகிய கொடிகளை அறுத்துக்கொண்டு தேர்ச்சக்கரம் முல்லை நிலத்தில் செல்லட்டும். 

இவ்வாறு நான் சொன்னவுடன் நீ உன் குதிரைகளுக்குச் சொல்லித் தேரை ஊரின் பக்கத்துக்கே ஓட்டிவந்தவிட்டாய். 

மிகவும் மகிழ்ச்சி. 
பாராட்டுக்கள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை

1
''நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
செம் முது செவிலியர் பல பாராட்ட,
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
மனை உறை புறவின் செங் காற் சேவல்   5
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
2
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,      10
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென          15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!             20

வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

காதல் புறாக்கள் 

No comments:

Post a Comment