தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
1
பசலை நோய் என் மேனியில் ஒவ்வொரு நாளும் மிகுதியாகிக்கொண்டே வருகிறது.தாயும் என்னை விருப்பமின்றிப் பார்க்கிறாள்.
2
நாடுகள் பலவற்றை வென்ற பசும்பூண் பாண்டியன் தன்னைத் தாக்கிய கொங்கர்களைத் திரும்பி ஓடும்படிச் செய்ததை அவனது கூடல் நகர மக்கள் இன்னிசை முழக்கத்துடன் கொண்டாடினர்.அந்தக் கொண்டாட்டத்தைக் காட்டிலும் பெரிது என்று சொல்லும்படி ஊர் மக்கள் என்னை அலர் தூற்றுகின்றனர்.
3
இங்கு நான் சில நாள் கூட உயிர் வாழமாட்டேன் போல இருக்கிறது.
என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, தோழி! நீ அழவேண்டாம்.
4
வடுகர் பெருமக்களின் தலைவன் எருமை என்பான் தமிழ்நாட்டின் வடபால் ஆள்கிறான்.நள்ளிரவில் போராடும் பகைவர்களை வென்று, ஏர் உழும் மாட்டு மந்தை, இனப் பெருக்கம் செய்யும் மாட்டு மந்தை அகியவற்றை கூடி மேய்க்கும் கோவலர் அவற்றிற்கு எழுப்பும் குறிப்போசைகளை அறிந்துகொண்டு, அந்த ஓசைகளை எழுப்பி, அவை தழுவிக்கொண்டு வருமாறு ஓட்டிக்கொண்டு வருவான்.தாம்புக் கயிற்றில் பூட்டப்பட்டிருக்கும் தொழுவத்திலிருந்தும் ஓட்டிக்கொண்டு வருவான். தன் மன்றம் நிறையுமாறு ஓட்டிக்கொண்டு வருவான். அவன் நிகரில்லாத வலிமையான தோளினை உடையவன்.
5
இந்தப் புகழ் பெற்ற எருமை அரசன் ஆளும் நாட்டில் உள்ளது அயிரியாறு.அவர் இந்த அயிரியாற்றைத் தாண்டிச் சென்றிருந்தாலும், மறத்தல் இல்லாமல் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பார்.
6
உன் பருத்த தோள்,தென்னங் குரும்பை போல் இருக்கும் முலை,மடிப்பு விழுந்த இடுப்பு,தழைத்திருக்கும் கூந்தல்,வானத்து நிலா போன்ற முகம்,அதில் உள்ள நெற்றித் திலகம்,காதில் இருக்கும் குழை,நீ அவரைப் பார்க்கும் பார்வைஆகியவற்றை அவர் நினைத்துக்கொண்டே இருப்பார்.விரைவில் திரும்புவார்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''வைகல் தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
2
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் 5
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
3
சில நாள் உய்யலென் போன்ம்'' எனப் பல நினைந்து,
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
4
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய, 10
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த 15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
5
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து 20
6
உள்ளுப தில்ல தாமே பணைத் தோள்,
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திரு முகத்து, 25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது.
நக்கீரர் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment