Pages

Monday, 12 September 2016

அகநானூறு Agananuru 251


அந்தச் செல்வம் பற்றி இந்தப் பாடல் குறிப்பாடுகிறது.

மோரியர் (மௌரியர்) தேர்ப்படையுடன் தாக்க வந்த செய்தியை இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.


தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.


1
உன் நிலைமையை எடுத்துரைக்கும் தூதும் சென்றுள்ளது. 
இனி உன் தோள் செறிவு பெறும். 
அவரைச் சொல்லிச் சொல்லி உன் நெற்றியில் ஏறியிருக்கும் பசலை நோயும் இனி மாய்ந்து போகும்.

அணிகலன் கழலும்படி இளைத்துப்போய் வருத்தமுடன் அவரையே நினைத்துக்கொண்டிருக்கும் உன் வருத்தத்தை அவர் கேட்பாராயின்.
2
அரசன் நந்தன் பெற்றது போலப் பெருஞ்செல்வம் பெற்றாலும், அவர் அங்குத் தங்கமாட்டார்.
3
வெற்றிக் கொடியுடன் தேர் நடத்தி வந்த கோசர், மோகூர் ஆலமரத்து மன்றத்தில் (பொதியில்) முரசு முழக்கித் தாக்கியபோது, மோகூர் அரசன் பணியவில்லை.
4
அதனால், கோசருக்குத் துணையாக, மோகூருக்குப் பகையாக, மோரியர் வந்தனர். மோரியர் வந்த தேர்ச்சக்கரம் உருளுவதற்காக அருவி பாயும் பள்ளப் பகுதியில் வழி அமைக்கப்பட்டது. அந்த வழியைத் தாண்டி அவர் பொருள் ஈட்டச் சென்றுள்ளார்.
5
மாசில்லாத வெள்ளை நிறத் தந்தம் கொண்டது யானை. 
புலிவாய்ப் பிடியில் தப்பிய யானை அது. 
அந்த யானை புலியை நிலத்தில் நெளியும்படிக் குத்தியது. 
பின்னர் தான் விரும்பும் தேக்கமரச் சோலைக்குச் சென்றது. 

இப்படி யானை செல்லும் வழியில் அவர் சென்றுள்ளார். 
உன் வளையல்களைக் கழலச் செய்தவர் சென்றுள்ளார்.

அவர் நிலைமையை நினை.
தூது சென்றுள்ளது.
வந்துவிடுவார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
2
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்     5
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
3
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10
பணியாமையின், பகை தலைவந்த
4
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
5
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை     15
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.        20

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது.
மாமூலனார்

கி.மு. காலத்துப் பாடல்

மோரியர் ஆட்சி
மோரியர் தேர் மோகூரைத் தாக்க வந்தது.
மோகூர் மதுரையின் பகுதி என்பர்
காவிரியாற்றின் வடகரையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மோகூர் உள்ளது 

No comments:

Post a Comment