அவனை நினைத்து நான் தூங்கவில்லை. சரி.
கடலும்
தூங்காமல் இருக்கிறதே! ஏன் தோழி?
தலைவி தோழியை வினவுகிறாள்.
1
நாம் தோழிமாரோடு கடலலையில் விளையாடினோம். புன்னைப் பூவின் தாது வண்டு மொய்க்கையில் உதிர்ந்து கொட்டிக் கிடக்கும் மணலில் விளையாடினோம்.
2
அவன் தேரில் வந்தான். தன்னுடன் வந்த வீரர்களாகிய இளைஞர்களை அனுப்பிவிட்டுத் தனியே வந்தான். மார்பில் பூமாலையும், தலையில் பூக் கண்ணியும் அணிந்திருந்தான். நாம் கட்டி விளையாடிய மணல்வீட்டைப் பெரிதும் பாராட்டினான். அவன் பாராட்டியது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்று தெரிந்துகொள்ளாமலேயே போய்விட்டான்.
3
அதுமுதல், நான் பெரிதும் துன்பப்படுகிறேன். என் தோள்கள் மெலிகின்றன. வளையல்கள் கழல்கின்றன. இதனைப் பார்க்கும் நம் சிற்றூர் மக்கள் என்னை அவனோடு சேர்த்துப் பழி தூற்றுகின்றனர். நான் கலக்கத்துடன் இரவெல்லாம் தூங்காமல் கிடக்கிறேன். அது சரி. கடல் ஏன் அலை வீசிக்கொண்டு தூங்காமல் கிடக்கிறது?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்
1
எவன் கொல்? வாழி,
தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த
ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர
நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள
மணல் எக்கர்க் காண்வர,
கணம் கொள் ஆயமொடு
புணர்ந்து விளையாட, 5
2
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு
நீக்கி,
தாரன், கண்ணியன், சேர
வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த
கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன்
பெயர்ந்தனன்; அதற்கொண்டு
3
அரும் படர் எவ்வமொடு
பெருந் தோள் சாஅய், 10
அவ் வலைப் பரதவர்
கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர்
கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த
நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment