Pages

Sunday, 11 September 2016

அகநானூறு Agananuru 249

தோழியும் தலைவியும் பேசிக்கொள்கின்றனர்.

1
தோழி, கேள். அவர் பொருள் ஈட்டச் சென்றுவிட்டார் என்றால், இந்த ஊர் பலநாள் என்னையும் அவரையும் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா?
2
அரசன் முசுண்டை சிறந்த வள்ளல். கிணையிசை முழக்கி வாழும் அகவுநர் வந்து கேட்டால், உணவுப் பொருள்களைத் தேரில் ஏற்றி வழங்குவான். தந்தங்களுக்குப் பொன்னணி பூட்டிய யானைகளை ஊற்றுநீர் சுரப்பது போல் வழங்குவான். அந்த முசுண்டை ஆளும் ஊர் வேம்பி. அந்த வேம்பி போன்றது என் மேனி நலம். அது தொலைந்த நிலையிலும் அவர் தன்னை எனக்குத் தராமல் போய்விட்டார்.
3
மழவர் மக்கள் மயில் தோகைகளை அணிந்துகொண்டிருப்பர். அவர்கள் இளங்காளைகளைக் கொன்று தின்பர். அவர்கள் காளைகளைக் கொன்ற களம் கோடைக் காற்றில் புலால் நாற்றம் அடிக்கும். அங்குள்ள அருநிழலில் அவர் தங்குவார்.
4
இரை தேடிச் செல்லும் புலியின் ஓசை அங்குக் கேட்கும். 
அதைக் கேட்டு மானினம் மூங்கில் காட்டுக்குள் ஓடும்.

இப்படிப்பட்ட மலைப்பாதையில் அவர் சென்றுள்ளார்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
2
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி,             5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்    10
3
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
4
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த 15
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
நக்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment