Pages

Sunday, 11 September 2016

அகநானூறு Agananuru 248

நன்றாக இருக்கிறது, உன் செயல்” என்று சொல்லி, தாய் சிரித்துக்கொண்டே போய்விட்டாள்.

1
தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
அதனை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

குன்றநாடன் நாள்தோறும் வருகிறான். 
காட்டுப் பன்றி எதிர் நிற்கிறது. 
வேட்டை நாயைத் துரத்திவிட்டு நிற்கிறது. 
குட்டிகளுடன் இருக்கும் தன் பெண் பன்றியை காட்டில் ஒளித்து வைத்துவிட்டு, தன்னைத் தாக்க வரும் ஆளைத் தான் தாக்குவதற்காக நிற்கிறது. 
கானவன் என்னும் காட்டு வேடன் அதன்மீது அம்பு எய்கிறான். 
அம்பு பாயாமல் ஒதுங்கி எதிர்த்து நிற்கிறது. 

“இந்தப் பன்றி என்னைப் போன்ற வீரம் கொண்டது; எனவே, கொல்லமாட்டேன்” என்று எண்ணிக்கொண்டு தலைவன் குன்றநாடன் அதனை விட்டுவிட்டு, தன் வழியில் நடந்து செல்கிறான்.
2
வலிமை மிக்க முறுக்குக் கயிற்றில் கட்டப்பட்டிருந்த காளை, கட்டிய கயிற்றின் புரி பிரிந்து அறும்படிக் கயிற்றை அறுத்துக்கொண்டு, வந்து நிற்பது போல, தன் அழகு தோன்றும்படி, குன்றநாடன் நம் இல்லத்தில் வந்து நின்றான். 

நம் தாய் அவனை ஒருமுறை பார்த்தாள். 
என் முகத்தைப் பார்த்தாள். 

“நன்றாக இருக்கிறது உன் செயல்” என்று சொல்லி ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுப் போய்விட்டாள்.   

அதனை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற  5
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
''அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்'' என,
எய்யாது பெயரும் குன்ற நாடன்     10
2
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
வல்லே என் முகம் நோக்கி,         15
''நல்லை மன்!'' என நகூஉப் பெயர்ந்தோளே.

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

தறுகண் பன்றி 

No comments:

Post a Comment