Pages

Tuesday, 30 August 2016

அகநானூறு Agananuru 218

இரவில் வராதே. 
எல்லாருக்கும் தெரிந்தாலும் தெரிந்துவிட்டுப் போகட்டும். 
பகலில் வருக. 
இவளைப் பெறுக. 
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

1
தன் யானைச் சுற்றம் பாராட்டும் ஆண்யானை. 
விரைந்து நடக்கும் வலிமை உள்ள ஆண்யானை. 

மூங்கில் முளைகளைப் பிருங்கி பிறவற்றிற்கு ஊட்டுமாறும், வேண்டிய தழைகளை உண்ணுமாறும் தழைக்கும்படி மழை பொழிகிறது. 

வாள் மின்னுவது போல மின்னி, மலை உச்சி நடுங்குமாறு இடித்து பெரிய துளிகளாக மழை பொழிகிறது.
2
இப்படி மழை பொழியும் நள்ளிரவில் நீ வர எண்ணுகிறாய். 
“இவள் சிறப்பு மிக்க அணிகலன்களைப் பூண்டிருக்கிறாள். 
இனிய தோற்றத்துடன் காணப்படுகிறாள். 

இவளது அகன்ற தோளைத் தழுவினால் அல்லது என் கண் உறங்காது” என்று சொல்கிறாய். 

“வழி தெரியாமல் இருள் மண்டிக் கிடக்கும் வழி, வரிப்புலி வழியில் நடமாடுபவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழி, பெருமலைப் பிளவு, இவையெல்லாம் எனக்குக் கடத்தற்கு அரிது அன்று” என்று எண்ணுகிறாய். வருகிறாய்.
3
அதனால், நுண்ணிதாக அரைக்கப்பட்ட சந்தனம் பூசிய உன் மார்பை ஒருநாள் ஆரத் தழுவாவிட்டாலும் இவளது அணிகலன்கள் நானே நழுவுகின்றன.
4
நீ வருவது தாய்க்குத் தெரிந்தாலும் தெரிந்துவிட்டுப் போகட்டும். 
ஊரே அறிந்து அலர் தூற்றினாலும் தூற்றட்டும். 

வண்டு மொய்க்கும், எரியும் தீ போன்ற தோன்றி மலரும், ஒளி திகழும் வேங்கை மலரும் மணம் கமழும் மலைச்சாரலில் பகல் வேளையில் இனி, நீ வருக

தோழி, தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
''கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து,          5
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
2
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
படாஅ ஆகும், எம் கண்'' என, நீயும்,
''இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி,    10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது'' என்னாய்,
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
3
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்   15
அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
4
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு,               20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
தழுவல்

No comments:

Post a Comment