Pages

▼

Sunday, 28 August 2016

அகநானூறு Agananuru 212

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வேல் போல்
காமம் என்  நெஞ்சில் பாயட்டும்.

1
நெஞ்சே! 
இவள் தன் அழகால் என்னை வாட்டும் அரிவை. 

மாற்றுக் குறையாத பொன்னால் செய்யப்பட்ட பெண்பொம்மை வானத்து இளவெயிலை தனக்குள் வாங்கிக்கொண்டு நிற்பது போல நிற்கிறாள். கூந்தலுக்குள் நிற்கிறாள். 

மணலில் முளைத்திருக்கும் நாணல்கிழங்கு போன்ற பல்லைச் செவ்விதழில் காட்டிப் புன்முறுவல் பூக்கிறாள். 

இசைநலம் தெரிந்தவன் யாழில் மீட்டும் செவ்வழிப் பண் போலப் பேசுகிறாள். 

இப்படி உன்னை மயக்கியவளை விரும்பி என்னைத் தொந்தரவு செய்கிறாய்.  
2
யானைக்கூட்டம் குளிக்கும் நீர் கலங்குவது போல நான் கலங்கிக்கொண்டிருக்கிறேன். 

இவள் பெற முடியாத அழகி என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. 
துன்பம் தரும் பாதையில் நாள்தோறும் வந்து என்னை வருத்துகிறாய்.
3
குட்டுவன் (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) போருக்கெழுந்தான்.
மின்னலும் இடியும் போல முழங்கும் வலிமையுடன் புறப்பட்டான். 
விரும்பிய இடங்களில் பாசறை (கட்டூர்) அமைத்துத் தங்கினான். 
கடலில் தோன்றும் நிலவொளி போன்று அவன் படைக்கருவிகள் ஒளி வீசின. 
அவன் தேன் மணக்கும் மாலை அணிந்திருந்தான். 
‘மறப்போர்க் குட்டுவன்’ என்று அவன் போற்றப்பட்டவன். 

அவனை எதிர்த்துப் போரிட யாரும் முன்வரவில்லை. 
அதனால் கடலைத் தாக்கினான். 
கடலலைகள் பின்வாங்கும்படிக் கட்டுப்படுத்தினான். 

அவன் கடலில் நட்ட வேல் அலையைக் கட்டுப்படுத்தியது போல, நெஞ்சே, காமம்  உன்மீது பாய்ந்து உன் திமிரை அடக்கட்டும்.  
4
இவள் உனக்குக் கிடைக்கக்கூடிய எளியவள் அல்லள். 
என்றாலும் இவளை நினைத்துத் துன்பத்தைத் தந்துகொண்டே இருக்கிறாய். 
நான் என்ன செய்வேன்? – 

இப்படித் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
தா இல் நல் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
மிகு கவின் எய்திய, தொகு குரல் ஐம்பால்,
கிளை அரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,                 5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
2
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,           10
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
3
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை 15
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்      20
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
4
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.

அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
யானைக்கூட்டம் குளிக்கும் நீர் போல் கலங்குகிறேன்

No comments:

Post a Comment