Pages

Saturday, 27 August 2016

அகநானூறு Agananuru 211

பல்லைப் பிடுங்கிய வரலாறு

1
ஒளி மிக்க தோழி! (எல்ல) இதைக் கேள். 

வெள்ளைச் சுண்ணாம்பு விரிந்து கிடப்பது போல மரா மரம் பூக்கும். 

முழக்கும் பறை போல் காலடியும், வலிமை மிக்க கொம்பும் கொண்ட யானை அதில் தன் தோலை உரசும். 
அப்போது மழைப் பனிக் கட்டிகள் கொட்டுவது போல மராம் பூக்கள் உழவர் காயவைத்திருக்கும் நெல் விதையின் மேல் உதிரும். 

இப்படி உதிரும் நாடு வேங்கடம்
அதனைத் தாண்டிச் சேன்றால் தமிழ் அல்லாத வேற்றுமொழி பேசப்படும் நிலம்

உன்னைப் பிரிந்து சென்றவர் வேற்றுமொழி பேசும் இடத்துக்குச் சென்றிருந்தாலும் விரைவில் திரும்பி வந்து உனக்கு அளி செய்வார்.
2
கன்றுகளை உடைய யானைக் கூட்டம் வழியில் குழி இருப்பதைப் பார்த்து பின்னே வரும் பெண்யானை விழாமல் இருக்க ஒலி எழுப்பும். 

வேந்தன் கடுமையான சினத்துடன் எச்சரித்தும் கேளாமல் போர்த்தொழில் கல்லாத எழினி தொலைநாடு சென்று தாக்கிப் பிடிபட்டுக்கொண்டான். 

அரசன் மத்தி அவன் பல்லைப் பிடுங்கித் தன் வெண்மணி-வாயில் கோட்டைக்கதவில் பதித்துக்கொண்டான். 

இந்தச் செய்தியைப் போலவும், 
அந்த மத்தி அரசனின் பனித்துறையில் கடலலை முழங்குவது போலவும் 
இங்கு உன்னை அலர் தூற்றுகின்றனர். 
நீ அழுகிறாய். 

இப்படி அழும்படி விட்டுவிட்டுப் பிரிந்தவர் விரைவில் திரும்பி உனக்கு அளி செய்வர். அழாதே. – இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் 5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
2
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,             10
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,               15
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment