Pages

Friday, 26 August 2016

அகநானூறு Agananuru 207

நான் கொடுத்த பாலை உண்ண மறுத்தவள், 

காதலன் தோண்டித் தந்த கலங்கல் நீரை உண்டிப்பாளோ? 

ஓடிப்போன தன் மகளை நினைத்துத் தாய் புலம்புகிறாள்.
1
அச்சம் தரும் கடல்நீர் வயலில் பாய்ந்து காய்ந்த வெள்ளைக் கல்லுப்பு அமிழ்தத்தை விற்பதற்காக மேற்குத் திசை ஊர்களில் விற்க எடுத்துச் செல்வர். பறவை வரும் குறியைப் பார்த்துக்கொண்டு செல்வர். (பெருஞ்செய் = உப்பளம்)
2
உப்பை வெண்ணிற முதுகு கொண்ட கழுதையில் ஏற்றிச் செல்வர். கழுதை வரிசையாகச் செல்லும். வழியில் அதன் கால் குளம்பு பதிந்த குழிகள் இருக்கும். அச்சம் தரும் அந்தக் கொடிய பாலைநிலப் பாதையில் என் மகள் எப்படிச் சென்றாளோ?
3
வழியில் ஈ மொய்க்க மதம் ஒழுகும் கன்னம் கொண்ட ஆண்யானை இருக்கும். அது நீண்ட கொம்புகளைக் கொண்டிருக்கும். வெயில் தின்பதால் வாட்டத்துடன் இருக்கும். அங்கு இருக்கும் கூவல் குழிகளில் தன் கையைப் புரட்டி நீர் பருகும். குடத்தை விட்டு மொள்ளமுடியாத அளவுதான் கூவலில் நீர் இருக்கும் (குறைகுட முகவை)

என் மகளைக் கூட்டிக்கொண்டு சென்ற ‘அறனிலாளன்’ (நெறி பிறழ்ந்தவன்) அந்தக் கூவலைத் தோண்டுவான். அதில் வரும் நீரை என் மகள் உண்டிருப்பாளோ? நெற்றியில் வியர்வை ஒழுக உண்டிருப்பாளோ?
4
இங்கே, நல்ல பாலில் தேனைக் கலந்து தருவேன். கூந்தலைத் தடவி விட்டுக்கொண்டு கெஞ்சுவேன் (மோழமை கூறுவேன்). ‘உண்ணமாட்டேன்’ என்று மறுப்பாள். அவள் உள்ளத்தில் ஒருவகை வெறுப்பு. (அவன் நினைவால் வந்த வெறுப்பு அது என்று இப்பொழுது புரிகிறது)

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
2
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்     5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
3
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்     10
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ
4
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,            15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.
மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
இப்படிக் கழுதைமேல் ஏற்றிக்கொண்டு 
உப்பு விற்கச் சென்றார்களாம் 

No comments:

Post a Comment