Pages

Thursday, 25 August 2016

அகநானூறு Agananuru 205

தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

1
உள்ளத்தைத் தைக்கும் அழகியே! 

உயிருக்கு உயிரான நட்புரிமை உடையவர் போலவும், குற்றமற்ற நெஞ்சம் கொண்டவர் போலவும் “உன்னைப் பிரியமாட்டேன்” என்று நீ நம்புமாறு கூறினார். 

பொய்யில் வல்லமை கொண்ட நெஞ்சத்தோடு கூறினார். அதனைக் காப்பாற்ற முடியாத கோட்பாடு உடையவர் அவர். சொல்லைக் காப்பாற்றும் துணிவும் அவருக்கு இல்லை. 

நீ இங்கே வருந்திக்கொண்டிருக்கிறாய். உன் நெற்றியில் பசப்பு உர்கிறது. இப்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
2
என்றாலும் அவரை நாம் வாழ்த்துவோம். 

பொலம்பூண்-கிள்ளி ஆட்சியில் காவிரிப்பூம்பட்டினம் பெற்றிருந்த செல்வம் போல அவர் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.

கோசர் செல்வ-வளம் மிக்கவர். 
படையுடன் வாழ்ந்தவர். 
அவர்களின் படையை அழித்து அவர்களின் நாட்டைக் கைப்பற்றப் ‘பொலம்பூண்-கிள்ளி’ விரும்பினான். 
விரும்பியவாறே செய்து முடித்தான். 
கோசரின் செல்வ வளத்தைக் காவிரிப்பூம் பட்டினத்துக்குக் கொண்டுவந்து குவித்தான்.

அவன் பெற்ற செல்வம் போல இவர் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம். 

அவர் கொண்டுவரும் செல்வத்தை நாம் நம் நல்ல விருந்தினர்களுக்கு வழங்கி விழாக் கொண்டாடுவோம்.
3
அவர் வேற்றுமொழி பேசும் (சொல்-பெயர்-தேம்) நாட்டைக் கடந்து சென்றுள்ளார். 

அங்கு ஊற்றுநீர் ஓடும். 
வேங்கை-மரம் பூத்துக் குலுங்கும். 
குரங்குகள் கை காட்டி அழைத்துக்கொண்டு துள்ளி விளையாடும். 

இப்படிப்பட்ட வழியில்தான் அவர் சென்றுள்ளார்.
ஆம் – ஊற்றுநீர். மழை பொழிந்து நின்ற பின்னர் வானம் வெளிவாங்கி இருக்கும். 
மூங்கில் நிழலில் ஊற்று ஓடும். 
யானையின் கன்னத்தில் மதநீர் ஒழுகுவது போல ஊற்று ஓடும்.

வேங்கை மலர் – புலித்தோல் போல மரத்தில் தலையை விரித்துக்கொண்டிருக்கும்.

கணக்கலை – குரங்குக் கூட்டம். அந்த மரத்தில் ஏறிப் பூக்கள் உதிரும்படி குரங்கு தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு விளையாடும்.

அப்படிப்பட வழியில்தான் அவர் சென்றுள்ளார். 
கவலை கொள்தற்கு ஒன்றுமில்லை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம்'' எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே   5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
2
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,    10
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல
3
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,      15
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,            20
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
நக்கீரர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

காவிரிப்பூம்பட்டினம் இக்கால நினைவுச்சின்னம்

No comments:

Post a Comment