Pages

Wednesday, 24 August 2016

அகநானூறு Agananuru 203

காதலனுடன் ஓடிப்போன மகளை நினைத்துக் 
கவலை கொள்ளும் தாய் 
இவ்வாறு கூறுகிறாள்.
1
தாய் மகிழ்ந்தால் என்ன, மனம் வருந்தினால் என்ன என்று எண்ணிக்கொண்டு தாயின் மகள் கொண்டுள்ள கள்ளக்காதல் உறவு பற்றி, அலர் நூற்றும் பெண்கள், கவலைப்படாமல் தூற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வாயில் தீ வைத்திருப்பவர்கள். “உன் மகள் இப்படி” என்று பலநாள் என்னிடமே அவர்கள் சொன்னார்கள். நான் என் மகளிடம் சொன்னால் வெட்கப்படுவாளே என்று மகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதன் பயன் இப்போது நான் அவள் இல்லாத வெற்று மனையில் வாழ்கிறேன்.
2
அவளோ, தாய்க்குத் தெரிந்தால் தாயோடு இணக்கமாக வீட்டில் வாழ முடியாது என்று எண்ணி, வீரக்கழல் அணிந்த காலும், வேல் தாங்கிய கையும் கொண்ட இளையோன் பின்னுக்கு வர முன்னே நடந்து சென்றுவிட்டாள். பல மலையடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டாள். 

நான் அவளுக்குத் தாய் (அன்னேன்) அன்று என்பது போல் சென்றுவிட்டாள்.
3
மான் வழி தடுமாறும் மலைவழியில் வெறுப்படையாமல் சென்றுவிட்டாள். 

நானோ செல்லும் விருந்தினரை வழியனுப்பி வைப்பது போல் அவர்களை அனுப்பிவிட்டு ஊரின் ஒரு மூலையில் (துச்சில் - ஒதுக்கிடம்) கிடக்கிறேன். 

நொச்சி பூக்கும் மனையில் வாழும் பெண்ணாகக் கிடப்பேனாகுக.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க'' என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
''இன்னள் இனையள், நின் மகள்'' என, பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
''நாணுவள் இவள்'' என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
2
''அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்'' என, கழற் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,      10
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
3
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,    15
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே!

மகட் போக்கிய தாய் சொல்லியது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

நொச்சி

2 comments: