தேமுதுகுன்றம் நாட்டை ஆண்ட கண்ணன் எழினி
வடவர் படையை முறியடித்தான்.
1
கண் மலரின் அழகை இழந்துவிட்டது.தோள் பூப்போன்ற மெத்தைத் தன்மையை இழந்துவிட்டது.நன்மக்கள் ஆசையோடு ஆராய்ந்து நோக்கிய பழமையான நலன்கள் எல்லாம் இழந்து துயரப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, தோழி, நீ வருந்த வேண்டாம்.இவ்வாறு தோழி சொல்கிறாள்.
2
வடநிலத்திலிருந்து முன்னேறி வந்த படைகளைத் தன் வலிமை மிக்க படைகளைக் கொண்டு தாக்கி ஓட்டிய அரசன் கண்ணன் எழினி.இவன் தேமுது-குன்றம் நாட்டைக் கடந்து சென்றிருந்தாலும், உன் வளையல்கள் நெகிழும்படி விட்டுவிட்டு, பொருள் தேடச் சென்ற அவர் நீண்டநாள் தங்கியிருக்க மாட்டார்.
3
தோளில் தொங்கும் இருண்ட கூந்தலை உடைய மடப்பத்தனம் கொண்டவளைத் தழுவிய மார்பில் புல்லிய மயிர் கொண்ட தலையை உடைய மகன் ஏறி விளையாடுவான். அதுபோல.
4
வெள்ளைத் தந்தங்களைக் கொண்ட ஆண்யானையானது, கருவுற்றிருக்கும் தன் பெண்யானையையும் அதன் இனத்தையும், ஊர்ந்து வரும் கன்றையும் அழைத்துக்கொண்டு பனி உறங்கும் பாதையில் செல்லும். ஒளி திகழும் கொன்றை பூத்துக் கிடக்கும் வழியில் செல்லும். அந்த வழியில் பொருளீட்டும் வினை மேற்கொண்டு அவர் சென்றுள்ளார். தேமுதுகுன்றத்தைத் தாண்டியிருந்தாலும் திரும்பி வரக் காலம் தாழ்த்த மாட்டார். தோழி! வருந்த வேண்டாம்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் வாழி, தோழி! முனை எழ 5
2
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
3
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் 10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
4
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, 15
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
மாமூலனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment