Pages

Monday 22 August 2016

அகநானூறு Agananuru 193

கரும்புத் தண்டு போல் அவள் பல்

1
வில்லை ஏராகக் கொண்டு உழுது உண்ணும் வழிப்பறிக் கொள்ளையர் காட்டுப் பாதைகள் கூடும் இடத்தை விரும்புவார்களே அல்லாமல் மழை பொழியவேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். 

ஒருநாள் அவர்களுக்குத் திருவிழாப் பெருநாள் போல வேட்டை வாய்த்தது. வழியில் சென்ற ஒருவனைக் கொன்று சுற்றத்தாருடன் கூடி அவனது உடைமைகளைப் பகிர்ந்துகொண்டனர். 

அவனோடு போராடிய களத்தில் குருதியோடு கிடந்த தசையை பருந்துகள் உண்டு மகிழ்ந்தன. 

சில யா மர உச்சிக்கு எடுத்துச்சென்று அதன் கிளையில் இருந்த தம் குஞ்சுகளுக்கு ஊட்டின. 
அதன் வாயிலிருந்து நழுவி விழுந்த கறித்துண்டை கொல்லும் பசியோடு வயது முதிர்ந்த நரி உணவாக்கிக்கொண்டது.

நெஞ்சே!
இப்படிப்பட்ட பாலைநிலக் காட்டு வழி நமக்கு எளிது என்று செல்ல நினைக்கிறாய்.
2
அவள் பல வகையில் சிறந்து விளங்கும் மேனியழகு கொண்டவள்.
இனிமையாகப் பேசுபவள். 
கரும்பின் உள்ளீடு (முருந்து) போன்ற பற்களை உடையவள். 
இளமை நலம் கொண்டவள். 
பருத்த தோளைக் கொண்டவள். 

அவள் தோளில் உறங்குவதை நான் கைவிடமாட்டேன். 
இப்படித் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
பொறித்த போலும் வால் நிற எருத்தின், 5
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும் 10
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
2
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
முருந்து ஏர் முறுவல், இளையோள்
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.

பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பருந்து குஞ்சுக்கு உணவு ஊட்டல் 

No comments:

Post a Comment