பொருளீட்டச் செல்லலாமா வேண்டாமா
அவன் மனம்
ஊசலாடுகிறது.
தன் நெஞ்சோடு பேசுகிறான்.
1
பாதிரிப் பூ தூய வெள்ளை நிறத்தில் பூத்திருக்கும்.அலரி தீ எரிவது போன்ற நிறத்தில் பூத்திருக்கும்.இரண்டு பூக்களையும் மாறி மாறி இடையில் வைத்துக் கண்ணியாகக் கட்டி அணிந்துகொண்டு உமணர் உப்பு விற்கச் செல்வர்.காலில் தோலால் தைக்கப்பட்ட செருப்பு அணிந்திருப்பர்.கையில் தடி வைத்திருப்பர்.அந்தத் தடியால் உப்புவண்டிச் சக்கரத்தைத் தூக்கிவிடுவர்.வண்டி இழுக்கும் எருதுக்கு அது உதவியாக இருக்கும்.எருதின் கழுத்தில் மணி ஒலிக்கும்.எருதினை ஓட்ட வாயில் ஊதல்-ஒலி (வீளை) எழுப்புவர்.
2
புதிதாக அந்த வழியில் செல்பவர்களுக்கு அந்த ஒலி (ஆள் இருக்கிறார் என்ற) பாதுகாப்பைத் தரும்.அது ஓமை மரங்கள் இருக்கும் காடு.வறண்டு கிடக்கும் கோடைக்காலம்.இந்த நீண்ட வழியில் சென்று பொருள் ஈட்டும் ஆசையோடு தொழில்பட எண்ணுவாய் ஆயின், உன்னவளைப் பிரிந்திருக்கும் வல்லமை (வல்லி) உனக்கு இருக்கிறதா?நெஞ்சே! எண்ணிப்பார்த்து எனக்குச் சொல்.
3
அவள் கூந்தல்.நிரையாக மொட்டு வைத்திருக்கும் முல்லைப் பூக்களைத் தின்றுகொண்டிருக்கும் கூந்தல். (முல்லை சூடிய கூந்தல்)ஆற்றுமணல் படிவு போல் நெளிந்திருக்கும் கூந்தல்.மெல்லிய கூந்தல்.படுப்பதற்கு இன்பம் தரும் கூந்தல்.நீண்டு தழைத்திருக்கும் கூந்தல்.(உறல் இன் சாயல் ஒலி இரும் கூந்தல்).இந்தக் கூந்தலைத் தெரிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறாயா? திட்டவட்டமாகச் சொல்லிவிடு (வலிய கூறு).உன்னால் சொல்ல முடியுமா? (வல்லையோ)
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, 5
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து
அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
2
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, 10
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதி ஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! ''நிரை முகை
3
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல் என விரிந்த உறல் இன் சாயல் 15
ஒலி இருங் கூந்தல் தேறும்'' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது.
ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment