Pages

Saturday, 20 August 2016

அகநானூறு Agananuru 187

மழவர் பூந்தொடை விழா


திருட்டுத்தனமாக அவளைச் சுவைப்பது அவனுக்கே வெட்கமாக இருந்ததாம்.
1
என் தோளின் தனிமை (புலம்பு, “புலம்பே தனிமை” – தொல்காப்பியம், உரியியல்) நீங்கும்படி அணைத்துக்கொண்டு உறங்கினார். பலநாள் உறங்கினார். யாருக்கும் தெரியாமல் மறைவாகக் கூடியிருந்தார். இது அவருக்கு வெட்கமாக இருந்தது. பொருள் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்தார். அது உயர்ந்த உள்ளம். நமக்கு உயர்வு தேடும் அந்த உள்ளத்தோடு காதலர் பிரிந்து சென்றுள்ளார்.
2
மழவர் சிறந்த குதிரை வீரர்கள். காலில் வீரக்கழல் அணிந்திருப்பர். அவர்கள் ’பூந்தொடை விழா’ கொண்டாடுவர். மாறுபட்டோரைப் போர்முனையில் சிதைத்துவிட்டுக் கொண்டாடுவர். விழாக் கொண்டாட்டத்தின் முதல் நாளில் முற்றத்தில் புதுமணல் பரப்புவர். அதுபோல் என் திருமணத்திற்காகப் பரப்பப்படும் மணல் முற்றம் தனிமைப்பட்டுவிடுமோ? தோழி! அச்சமாக இருக்கிறது.
3
நம் ஊர் ‘சில்குடிப் பாக்கம்’ (சில குடிமக்கள் மட்டுமே வாழும் ஊர்) இது கல் சேர்ந்த மலையில் இருக்கிறது. தலையை விரித்துக்கொண்டிருக்கும் ஞெமை மரங்களுக்கு இடையே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கிறது. இந்த ஊரில் இரவெல்லாம் தங்கி ஊர்மக்கள் திருமண விருந்துவிழாக் கொண்டாடவேண்டும்.
4
இந்த விழா விடிற்காலம் (ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து) நடைபெறுவது வழக்கம். அடி கருத்திருக்கும் யா மரம் கோழியின் கொண்டை போல் தளிர் விட்டிருக்கும். அது வேனில் காலத்தில் காய்ந்துவிடும். அப்போது அங்கு வாழும் யானை பனைமரத்தைப் பிளந்து அதன் உள்ளிருக்கும் சோற்றுப்பகுதியை உண்ணும். காலை வேளையில் உண்ணும். இத்தகைய காட்டுவழியில் சென்றுள்ளார்.
5
ஊர் மக்கள் கை மேல் தலையை வைத்துக்கொண்டு உறங்குவர். அப்போது பரதவர் கடலில் மீன் பிடிக்கச் செல்வர். வாள் போல் வாயை உடைய சுறா மீனைப் பிடிப்பர். பனி விழும் விடியற்காலத்தில் கடலில் பிடிப்பர். அவர்கள் செல்லும் அம்பி (படகு) போல் காட்டில் பனைமரத்ததைப் பிளக்கும் யானை தோன்றும். இப்படி யானை தோன்றும் காட்டுவழியில் அவர் சென்றுள்ளார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்     5
2
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி! சேண் ஓங்கு               10
3
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
4
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து              15
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
5
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை      20
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம்.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

அம்பி

No comments:

Post a Comment