Pages

Saturday, 20 August 2016

அகநானூறு Agananuru 186

பழையன்


அவன்தானே என்னுடன் இருக்கிறான். 
நானா அவனை வரச்சொன்னேன்? 
அவன் மனைவி என்னிடம் பிணக்கிக்கொள்கிறாளே! 
பரத்தை இவ்வாறு சொல்லி இறுமாப்புக் கொள்கிறாள்.
1
மழையும் இல்லாமல், வறட்சியும் இல்லாமல் வாழ்வதுதான் மீனவர் வாழ்க்கை. அவர்கள் வலை வீசி மீன் பிடிக்கும் குளத்தில் தாமரை மலர்ந்திருக்கும். காற்று வீசும்போதெல்லாம் அந்தத் தாமரையின் இலை யானையின் காது ஆடுவது போல ஆடும். இப்படிப்பட்ட ஊரின் தலைவன்தான் அந்த ஊரன்.
2
அவனுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பானது, யானை மிதவையில் ஏறிக்கொண்டு புனலில் விளையாடுவது போன்று இன்பமானது. இப்படிப்பட்ட நட்பைப் பற்றி ஊரே பெரிதாகத் தூற்றிப் பேசுகிறது.
3
மகளிர் தம் வளையல் கைகளால் யாழ் மீட்டுவர். சிலர் குணில் தடியால் முழவில் இசை முழக்கிப் பண் பாடுவர். இப்படி விழாக்கோலத்தில் அவன் சந்தனம் மணக்கும் தன் தோளை மற்றொருத்திக்குத் தந்துகொண்டிருக்கிறான். – இவ்வாறு அலர் தூற்றுகின்றனர்.
4
அவன் மனைவி என்னோடு பிணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறாள்.


இவன் மழைத்தாரை போல் அம்பு எய்யக்கூடியவன். மார்பில் தோல் கவசம் அணிந்தவன். 

(எழுவர் கூட்டணி தாக்கியபோது போரில் மாண்டான்) 

அப்போது அவன் மனைவி வளையலை உடைத்துக்கொண்டு அழுதான். அது போல் நான் அழமாட்டேன். அவன் என்னை விட்டுப் போய்விட்டான் என்று அழமாட்டேன். நான் அவனுக்கோ, அவன் மனைவிக்கோ பகையாளி அன்று. மனைவியின் நெற்றி பசக்கும்படி செய்துகொண்டு வாழ்கிறானே அவள் கணவன், அவன்தான் அவளுக்குப் பகை. எனக்கு நண்பன். அவ்வளவுதான், எனகிறாள் பரத்தை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் 5
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
2
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
3
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, 10
ஈர்ந் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
4
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்  15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.   20

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இது குதிரை முகம் கொண்ட படகு
பாடல் யானைமுகப் படகைக் குறிப்பிடுகிறது 

No comments:

Post a Comment