இன்பத்தில் களவு வேண்டாம்
கற்புத் திருமணம் வேண்டும்
1
யாமப் பொழுது முழுவதும் உன்னோடு இன்பமாகக் கழித்தேன். ஆனால் என் நெஞ்சம் துன்பத்தில் வருந்துகிறது. கண்ணீர்ப் பெருக்குடன் வாழ்கிறேன். இதனைத் தவிர்த்தல் வேண்டும். நீ வானளாவ உயர்ந்த மலையின் தலைவன் ஆயிற்றே. களவு இன்பம் வேண்டாமே.
2
அரசன் உதியன் ஆளும் குழுமூர் மலையில் பல காட்டுப்பசுக்கள் (பல்லான்) மேயும். அவற்றுடன் வளர்ப்புப் பசுக்களும் (நல்லான்) மேயும். பின் நிழலில் படுத்து ஒற்றுமையாக அசைபோடும்.
அரசன் உதியன் கொடையைக் கடமை என்னும் அணிகலனாக அணிந்துகொண்டு வாழ்பவன். அவன் உணவு வழங்கச் சமைக்கும் மடத்தில் (அட்டில்) உணவு உண்பவரின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பது போல, அவன் மலைச்சோலையில் கொட்டும் அருவியின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
3
அங்கு, தயங்கி நடக்கும் புதிய யானைக்கன்றையும் பெண்யானையையும் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு ஆண்யானை செல்லும். அதனைப் பார்த்து, கல்லுக் குகையில் இருக்கும் புலி புலம்பும்படி ஆண்யானை குகையே அதிரும்படி பிளிறிக்கொண்டு செல்லும்.
4
இப்படிப்பட்ட வழியில் வருகிறாய். என்னைப் பாதுகாக்கும் கானவர் உறங்கும் காலம் பார்த்து வருகிறாய். மான் செல்லும் சிறிய காட்டுப்பாதையில் வருகிறாய். இப்படி எனக்கு அச்சம் தரும் வகையில் வருவதைத் தவிர்க்க வேண்டும். (மணந்துகொள்ள வேண்டும்).
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
2
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் 5
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
3
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, 10
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
4
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி,
வரைவு கடாயது.
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment