Pages

Saturday 13 August 2016

அகநானூறு Agananuru 166

பொய் சொல்லுவோரைக் கொன்று பலி கொள்ளும் தெய்வம் 


1
தென்னை மரத்தில் (நன்மரம்) கட்டியிருந்த நனைமுதிர் சாடியின் (முதிர்ந்த கள்ளுப் பானையின்) கோப்பு (கோய்) உடைந்துவிட்டால், மழைத்துளி விழுவது போலத் தெருவெல்லாம் நடுங்கும் ஊர் வேளூர்வாயில். அது நெல்வளம் பெருகும் பழமையான வயல்களைக் கொண்ட ஊர்.
2
அந்த வேளூர்வாயில் ஊரின் கோயிலில் தெய்வம் இருக்கிறதே, அந்தத் தெய்வத்துக்குத் தெளித்த மணப்பொருள்களையும், மாலையையும் வண்டுகள் தீண்டாமல் இருக்குமே, குற்றம் செய்தவர்களைக் கொன்று உயிர்ப் பலி கொள்ளும் அச்சம் தரும் தெய்வமாயிற்றே அது, அதன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்
 
(சத்தியம் செய்து சொல்கிறேன்) நீ கடுப்போடு இருக்கும் அந்த கூந்தல் ஒப்பனைக்காரியோடு (புனையிருங் கதுப்பு) எனக்குத் தொடர்பு இல்லை.
 
இருக்குமாயின் அந்தத் தெய்வம் என்னைத் தண்டிக்கட்டும் என்று சொல்லி அவள் கணவன் அவன் மனைவியைத் தேற்றுகிறான்.
3
அந்த மகிழ்நன் அவன் மனைவியிடம் அப்படிச் சொல்லித் அவளைத் தேற்றுகிறான் என்றால் நேற்று காவிரி வெள்ளத்தில் (கோடு தோய் மலிர் நிறையில்) மாலை அணிந்த யானைபோல் மகிழ்ச்சித் திருமணம் செய்துகொண்டு என்னை ஈரப்படுத்தி விளையாடினானே (உடலுறவு ஈரம்) அவன் யார்? தோழி, நீயே சொல், என்று பரத்தை தன் தோழியிடம் வினவுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

1
''நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்கு மழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்,
2
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை,     5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள் வயின்
அனையேன் ஆயின், அணங்குக, என்!'' என
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின், 10
3
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?  15

பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, ''யான் ஆடிற்றிலன்'' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது.
இடையன் நெடுங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வேளூர்வாயில் - சங்ககாலப் பெயர்
புள்ளிருக்கு வேளூர் இக்காலப் பெயர்

No comments:

Post a Comment