பிரியும் முன்பே அவள் கண்ணீர் விடுகிறாளே!
1
“பொருள் தேடிவரப் பிரிவது எப்படி, செல்லும் முன்பே கண்ணீரோடு காணப்படுகிறாளே” தலைவன் சொல்கிறான்.
பிடரியில் சுருண்ட மயிர்ப் பித்தை கொண்டிருக்கும் கொடுமை செய்யும் ஆடவர் அம்புகளால் தாக்கி வழியில் செல்லும் புதியவர்களைக் கொல்வர். அந்தப் பிரிவுப் பாதையில் கழுகுகள் முடை நாற்றம் வீசும் உடல் பிண்டங்ககளைக் கூடித் தின்னத் தன் இனத்தை அழைக்கும். இப்படிப்பட்ட, அச்சம் தரும் காட்டைக் கடந்து செல்ல எண்ணிக்கொண்டிருப்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாளோ என்னவோ?
2
தோளிலே சுரும்பு வண்டு மொய்க்கும்படித் தழைத்துத் தொங்கும் கூந்தல், அழகிய மாமை நிற மேனி, நுட்பமான அணிகலன்கள், ஆகிவற்றைக் கொண்ட என் குறுமகள் (சிறுமி) தன் சுணங்கு தோய்ந்த மார்பில் என்னைத் தாக்குவதற்கென்றே திரண்டு எழுகின்ற இளமையான முலை நனையும்படி மலர் போன்ற கண்களிலிருந்து கண்ணீரை உகுக்கிறாளே! எப்படிப் பிரிந்து செல்வேன்?
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
வினைவயிற் பிரிதல் யாவது? ''வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்'' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோள் தாழ்பு
2
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே.
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு
கண்டு, ''முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி'' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது.
மதுரைப் புல்லங்கண்ணனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment