Pages

Thursday 11 August 2016

அகநானூறு Agananuru 158

அவள் அழகு


1
தாயே, இவள் பேரழகைப் பார்த்து கவலை கொள்ளாதே. இடியுடன் பொழிந்த மழை இப்போது ஓய்ந்திருக்கும் நள்ளிரவு நேரம். இவள் காதில் ஆடும் குழையைப் பார்த்து மீண்டும் மின்னுகிறதோ என்று கவலை கொள்ளாதே. இவள் கூந்தலைப் பார்த்து மீண்டும் மேகம் வந்துவிட்டதோ என்று கவலை கொள்ளாதே. இவள் நடையைப் பார்த்து மலையிலிருந்து மயில் இறங்குகிறதோ என்று கவலை கொள்ளாதே.
2
நம் தோட்டத்தில் சூர்மகள் வாழும் காடு உள்ளது. அங்கு அணங்குத் தெய்வம் வரும். சுடரும் பூவைத் தலையில் வைத்துக்கொண்டும் வரும். அது உன் கனவில் வந்திருக்கும். காண்பதெல்லாம் உண்மை என்று நனவில் தோன்றும்படி வந்திருக்கும். இது உனக்கு ஏற்பட்டுள்ள மருட்சி.
3
நீயே இப்படிச் சொல்லிக்கொண்டு மருண்டால் தனியே இருக்கும் இவள் அஞ்சி நடுங்கமாட்டாளா? ஊர் மன்றத்தில் இருக்கும் கோட்டான் குழறினாலும் இவள் நெஞ்சு நடுங்கி உன்னைத் தழுவிக்கொள்வாள் அல்லவா?
4
மேலும் இப்போது இவளது தந்தையும் இல்லை. புலிக்கூட்டம் போன்ற நாய்களைச் சங்கிலியில் பிடித்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டான். முருகன் போல் சீற்றம் கொள்ளும் அவன் இருந்தாலாவது இவள் அஞ்சாமல் இருப்பாள் அல்லவா? அவரும் இல்லாதபோது இவளையே விளையாட்டாக மிரட்டுகிறாயே! மிரட்டாதே என்று செவிலித் தாய்க்குச் சொல்பவள் போலத் தோழி தலைவியைப் பற்றி வெளியே காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு கூறுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
''உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,   5
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்'' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
2
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்     10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
3
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
4
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,  15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

நாயுடன் வேட்டை

No comments:

Post a Comment