யவனர் கப்பல்
அவளைக் கண்கலங்க விடமாட்டேன், அவன் சொல்கிறான்.
1
புற்றில் செங்கறையான் இரையைத் தின்று சலித்துவிட்டால் கரடி இனம் இரும்பைப் பூக்களை மேயும்.
2
இப்படிப்பட்ட வழியில் நெடுந்தொலைவு சென்று அரிதாகப் பெறக்கூடிய விழுமிய பொருளை எளிதாக் பெறுவதாக இருந்தாலும், நெஞ்சமே! என்னவள் கண்ணில் நீர் மல்க விட்டுவிட்டு நான் உன்னோடு வரமாட்டேன்
3
சுள்ளியாறு என்று வழங்கப்பட்ட பேரியாறு (இக்காலப் பெரியாறு) சேர நாட்டில் ஓடுகிறது. அதில் நுரை கலங்கும்படி யவனர் (கிரேக்கர்) நல்ல கட்டமைதி கொண்ட நல்ல மரக்கலங்களை ஓட்டினர். அதில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மிளகை வாங்கிச் சென்றனர். முசிறித் துறைமுகம் இதற்குப் பயன்பட்டது. சேரலர்களுக்கு உரிய இந்த முசிறித் துறைமுகத்தைப் பாண்டிய அரசன் செழியன் வளைத்துக்கொண்டான்.
4
கடுமையான போரில் செழியன் வென்றான். முசிறியில் யவனர் வைத்திருந்த படிமச் சிலைகளைக் கவர்ந்து எடுத்துக்கொண்டு தன் கூடல் (மதுரை) நகருக்கு வந்தான். கூடல் நகருக்கு மேற்குப் பக்கம் நெடியோன் குன்றம் (முருகனின் திருப்பரங்குன்றம்) இருந்தது.
5
நெடியோன் குன்றத்தில் மயில் கொடி உயர்த்தப்பட்டிருக்கும். எப்போதும் இந்தக் குன்றம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதில் ஆழமான ஒரு நீர்ச்சுனை உண்டு. அதில் நீலம் பூ பூத்திருக்கும். என் காதலி அந்த நீலமலர் போன்ற கண்ணினை உடையவள். அவள் கண்ணில் கண்ணீர் பனி நிறையுமாறு விட்டுவிட்டு நெஞ்சமே! நான் வரமாட்டேன். – இவ்வாறு தலைவன் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
2
அத்த நீள் இடைப் போகி, நன்றும் 5
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
3
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
4
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
5
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு
அழுங்கியது.
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment