Pages

Saturday, 6 August 2016

அகநானூறு Agananuru 148

மாலையில் வருக


கூகை பகலில் இரை தேடுவதில்லை. ஏன்? ஒரு கற்பனை.
1
பனைமரம் போலத் திரண்டிருக்கும் கைகளைக் கொண்டது யானை. அதற்குக் கொலை வெறி அடங்கவில்லை. உடலில் மதமதப்பும் வலிமையும் இருக்கிறது. வண்டுகள் மொய்க்கும்படி மதம் ஒழுகுகிறது. அது தன் மேல்நிமிர்ந்த கொம்புகளால் காட்டிலுள்ள மரங்களைச் சாய்த்தது. வலிமை மிக்க புலி உருமும்படிக் குத்தியது. இந்தச் சினத்தை விட்டுவிட்டு விளைந்ததிருக்கும் தினைவயலில் மேய்ந்தது. இப்படி மேயும் புனக்காட்டை உடைய நாடன் அவன்.
2
அரசன் ஆய்எயினன் சிறந்த குதிரைவீரன். தேர்வீரன் ஞிமிலியைத் தாக்கினான். போர்க்களத்திலையே எயினன் மாண்டுபோனான்.
 
எயினன் பறவைகளைப் பாதுகாத்து வந்தவன். 
 
அவன் மாண்டுகிடப்பதைப் பிணம் தின்னும் கூகை கண்ணால்கூடக் காண விரும்பவில்லை. எனவே இனி எல்லாப் பகலிலும் வெளியில் வருவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது.
 
பார்வைக் கூர்மையான கூகையின் கண்கள் பகலில் கூசும். இரவில் நன்றாகத் தெரியும். அதனால் அது பகலில் வெளிவருவதில்லை. இதனைப் புலவர் இவ்வாறு கூறுகிறார். இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்
3
இந்த நிகழ்ச்சியில் பறவைகளுக்கு நேர்ந்த துன்பத்தை விட, நீ இரவில் வருவதால், இவளுக்குத் தோன்றும் துன்பம் பெரிது. அதனால் மாலை வேளையில் நீ வருதல் வேண்டும். மலை அடுக்கத்தில் உள்ள மூங்கில் முளைகளை யானை மேய்ந்துகொண்டிருக்கும் மாலை வேளையில் வருதல் வேண்டும். இவ்வாறு தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;  5
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
2
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10
3
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை, வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.

பகல் வருவானை ''இரவு வருக'' என்றது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கூகை

No comments:

Post a Comment