Pages

Saturday, 6 August 2016

அகநானூறு Agananuru 146

எருமை பெண்-எருமையைத் தழுவிக்கொண்டு படப்பைக்குச் செல்லும் நாடன்


பரத்தையிடமிருந்து வந்த கணவனிடம் மனைவி புலம்புகிறாள்.
1
வலிமை மிகுந்து உடலுரம் பெற்ற சிறந்த எருமைக் கடா பகலில் பூத்திருக்கும் பொய்கையில் கிடந்துவிட்டுத் திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊரினை உடைய தலைவன் நீ.
2
உன் தேரானது மணி ஒலியுடன் அணியழகால் மினுக்கும் மகளிர் சேரியின் பக்கம் பல நாள் சென்றது என்றால், என்னைப் போல இரக்கம் கொள்ளத் தக்கவள் வேறு யார் இருப்பார்கள்? நீ மாயம் செய்யும் பரத்தன். உன் வாயில் வந்த சொற்களை நம்பி காற்றுமழையில் ஆடும் மலரில் நீர் சொட்டுவது போலக் கண்ணீர் விட்டுக்கொண்டு, தாய் பேணிக் காத்த உடல் நலத்தை விரும்பாமல், தோழிமாரும் அயலாரும் மருளும்படி வாழ்பவள் என்னைப் போல் வேறு யார்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

1
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,    5
2
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள் தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் 10
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


நாகு எருமையை நாடும் எருமை ஏறு

No comments:

Post a Comment