என் மகளை அடித்த கை
அன்னியின் காவல் மரம் வெட்டப்பட்டது போல்
வெட்டப்படட்டும்
என் முதுகு எனக்குச் சொந்தம் அன்று. தாய்
அடிக்கட்டும் – மகள் இப்படி நினைத்தாளாம்.
1
புழல் என்னும் மரம் தன் வேர்க்காலை வெளியில் காட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். அதில் இருந்துகொண்டு சில்வீடு என்னும் வண்டு தேரின் மணியோசை கேட்பது போல ஒலிக்கும். நீர்ப்பசை வற்றிக்கிடக்கும் மரங்களில் அமர்ந்துகொண்டு பொன்னைப்போல் தலையைக் கொண்டு ஓந்தி (பச்சோந்தி) தலையை உந்தி உந்தி ஆட்டும். வெயிலால் அழகு இழந்து தென்படும் நிலம் அது. வெண்ணிற ஞெமை மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும். துன்புற்று ஆள் நடமாட்டம் இல்லாத அந்தக் காட்டுப்பாதையில் என் மகள் அவனொடு செல்கிறாள். அவள் இரக்கம் கொள்ளத் தக்கவள்.
2
வரிப்புலி தாக்கிய யானை புண்பட்டுச் சிதைந்த முகத்தில் குருதி ஒழுக நடமாடும். உயர்ந்த முகடுகளைக் கொண்ட அந்த மலையில் என் மகள் அவனுடன் செல்கிறாள் என்று கூறுகிறார்கள்.
3
பெருஞ்சிறப்புக் கொண்டவன் அன்னி. குறுக்கைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் திதியன் என்னும் அரசன் அன்னி என்பவனின் காவல்மரம்புன்னையை வெட்டி வீழ்த்தினான். அந்தப் புன்னை மரம் போல என் கை துன்புறட்டும்.
4
என் மகள் செல்வ வளம் மிக்க தந்தையின் வளமனையில் வாழ்ந்தவள். யானை முழங்கும்போது அதன் ஒலிக்கு இணையாக குருகுப் பறவை குரல் கொடுக்கும் வளமனை அது. உறக்கமின்றி முரசு முழங்கும் வளமனை அது. இதனைத் துய்த்துக்கொண்டு வாழ்ந்தவள் அவள். இங்கு நடந்து ஓடினாலும் அவளுடைய கால் வலிக்குமே என்று அவளைப் போற்றி வளர்த்துவந்தேன். ஒருமுறை அவள் நடந்துகொண்டதைக் கண்டித்து ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்டிருந்த அவளது கூந்தலைப் பிடித்துக்கொண்டு, என் கையிலிருந்த கோல் முறிந்து சிதையும் அளவுக்கு அவள் முதுகில் அடி அடி என்று அடித்தேன்.
5
அப்போது அவள் “அம்மா, என் முதுகு, எனக்கு உரியது” என்று சொல்லவில்லை. வலிக்கிறது அடிக்காதே என்று சொல்லவில்லை. “என் முதுகு உனக்கு உரியது” என்று காட்டிக்கொண்டிருந்தாள். அமர்க்கண் அஞ்ஞை அவள் (விருப்பத்துடன் என்னைப் பார்க்கும் என் அன்னை அவள்) அவளை அடித்த என் கை வெட்டப்பட்ட அன்னி அரசன் காவல் மரம் போல வெட்டி வீழ்த்தப்படட்டும். – இப்படிச் சொல்லிக்கொண்டு செவிலித்தாய் வருந்துகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு 5
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
2
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
''அருஞ் சுரம் இறந்தனள்'' என்ப பெருஞ் சீர் 10
3
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
4
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 20
5
''எனக்கு உரித்து'' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
கயமனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment